எதிர்வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலிற்கு தயாராகும் வகையில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்காக பூத் அளவிலான உறுப்பினர் சேர்க்கையை பலப்படுத்தும் வகையில் ‘சக்தி’ என்ற பெயரிலான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்ட தொடக்க விழாவில் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஒரு காலத்தில் தேர்தல் நேரத்தில் ஜவஹர்லால் நேரு அல்லது இந்திரா காந்தி பெயரை கூறினால் மட்டும் போதும், லட்சக்கணக்கான பொதுமக்கள் பூத்களுக்கு வந்து காங்கிரஸுக்கு ஓட்டு போடுவர்.
ஆனால் இன்றைய நிலை அப்படி இல்லை, நேரு - இந்திரா காந்தியின் பெயரால் இனிமேலும் காங்கிரஸால் ஓட்டுகளை வாங்க இயலாது என்றார் ப.சிதம்பரம்.
ஒரு கட்டத்தில் சவால் விடுக்க முடியாத அரசியல் கட்சியாக காங்கிரஸ் விளங்கியது, ஆனால் இன்று அப்படி இல்லை.
தற்போது 2 கட்சிகள் மட்டுமே தேசிய அளவில் தடம் பதித்துள்ளன. ஒன்று காங்கிரஸ் மற்றொன்று பாஜக. மேலும் பிராந்திய அளவிலான அரசியல் கட்சிகள் எண்ணிக்கையும் அதிகரித்து முக்கிய பங்காற்றி வருகின்றன என தெரிவித்தார்.
பாஜக நம்மை ஏமாற்ற அனுமதிக்காதீர்கள், பாஜகவின் கொள்கையான காங்கிரஸ் அல்லாத தேசம் என்பதை எப்போதும் அவர்களால் உருவாக்க முடியாது என்றும் ப.சிதம்பரம் கூறினார்.
வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் ப.சிதம்பரம் பேசினார்.