
TRAI தலைவர் வங்கி கணக்கில் ஒரே ஒரு ரூபாயை ஹேக்கர்கள் டெபாசிட் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆதார் தகவல்கள் மிகவும் பாதுகாப்பானவை எனக் கூறி வந்த, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எனப்படும் டிராய் அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.சர்மாவுக்கு, மர்மநபர் ஒருவர் ட்விட்டரில் சவால் விடுத்தார். இதற்கு ட்விட்டரில் பதில் அளித்த சர்மா, தமது ஆதார் எண்ணை பதிவிட்டார். மேலும் அவர், “தமது ஆதார் எண்ணை வைத்து ஏதாவது தீங்கு ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஒரு உதாரணம் செய்து காட்டுங்கள்” என சவால் விடுத்தார்.
இதையடுத்து, சர்மா தமது ஆதார் எண்ணை பதிவிட்ட சில நிமிடங்களிலேயே, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏலியட் ஆல்டென்சர் என்னும் ஹேக்கர், டிராய் தலைவர் சர்மா குறித்த முழு விவரங்களையும் ட்விட்டரில் பதிவிட்டார். இதுதவிர, அவரது வாட்ஸ் அப் முகப்பு புகைப்படத்தையும் வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார்.
இந்நிலையில் ட்ராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மாவின் வங்கி கணக்கில் ஒரு ரூபாயை டெபாசிட் செய்து அதனை புகைப்படம் எடுத்தும் ஹேக்கர்கள் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, ஆதார் எண் மூலம் டிராய் தலைவரின் தகவல்கள் திருடப்பட்டதாக வெளிவந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள ஆதார் முகமையான UIDAI, சர்மாவின் தகவல்கள் ஆதாரின் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டதல்ல என தெரிவித்துள்ளது.