12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதா, மக்களவையில் நிறைவேறியது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காஷ்மீர் மாநிலம் கதுவாவில் ஒரு சிறுமியும், உத்தரபிரதேச மாநிலம் உன்னா நகரில் ஒரு சிறுமியும் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் அவசர சட்டத்தை கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்தது.
இந்த நிலையில், அவசர சட்டத்துக்கு மாற்றாக, குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வ தற்கான மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. உறுப்பினர்களின் விவாதத்துக்கு பிறகு, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவின்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு, குறைந்தபட்ச தண்டனை 20 ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனை ஆயுட்கால சிறை அல்லது மரண தண்டனையாகவும் இருக்கும்.
12 முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை வன்கொடுமை செய்பவர்களுக்கு, 20 ஆண்டு சிறை அல்லது ஆயுட்கால சிறை தண்டனை விதிக்கப்படும். பெண்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கான குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.
அதிகபட்சமாக, ஆயுள் தண்டனை விதிக்கப்படும். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், எவ்வளவு பெரிய செல்வாக்கு உடையவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு முன்ஜாமீன் கிடையாது என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது