வெள்ளி, 27 ஜூலை, 2018

10 லட்சம் கோடி ரூபாயை 2 மணி நேரத்தில் இழந்த ஃபேஸ்புக் நிறுவனம்! July 26, 2018

Image


ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த சில மாதங்களில் கடும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கேம்பிரிட்ஜ் அனலிடிகா மற்றும் இதர ஆப் நிறுவனங்கள் சில ஃபேஸ்புக் பயனர்களின் ரகசிய தகவல்களை தவறாக பயன்படுத்தி லாபம் அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கேம்பிரிட்ஜ் அனலிடிகா மூலம் ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டு இந்தியாவில் தேர்தல்களில் அவற்றை சில கட்சிகள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதன் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்த நிலையில், தனிமனித தகவல்களை பாதுகாப்பது தொடர்பான விஷயங்களில் ஃபேஸ்புக் நிறுவனம் மிகவும் பின் தங்கியிருப்பதாகவும், போலி செய்திகளை தடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று சில நாடுகள் அழுத்தம் கொடுத்தன. 

இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு நிதி நிலை முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் தனியுரிமை பாதுகாப்பு, விளம்பர சந்தைகளில் பயன்பாடு குறைவது ஆகிய காரணங்களால் அடுத்த சில ஆண்டுகளுக்கு இலாப வரம்புகள் கடுமையாக சரிவடையும் என கூறப்பட்டது. மேலும் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான வகையில் பயனர்களின் எண்ணிக்கையும், லாபமும் குறைவாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு 47 சதவீதமாக இருந்த நிறுவனத்தின் இயங்கும் லாப வரம்பு  இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 44 சதவீதமாக சரிந்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் 30 சதவீதத்தை இது எட்டும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான டேவிட் வெஹ்னர் கூறினார்.

இந்த எதிர்மறை தகவல்கள் பங்குச்சந்தையில் உடனடியாக எதிரொலித்தன. அமெரிக்க பங்குச்சந்தை தொடங்கிய இரண்டு மணி நேரங்களில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடுமையான சரிவை சந்தித்தது. ஒட்டொமொத்தமாக இரண்டே மணி நேரத்தில் அந்நிறுவனத்தின் மதிப்பில் 10 லட்சம் கோடி ரூபாய் சரிந்தது. இது அந்நிறுவனத்தின் மொத்த மதிப்பில் 4ல் ஒரு பங்காகும். இந்த மதிப்பானது இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் மதிப்பபைக் காட்டிலும் கூடுதலானது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை 2015ஆம் ஆண்டில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மதிப்பில் ஒரே நாளில் 12 சதவீதம் சரிவை சந்தித்தது, அதற்கு பின்னர் ஒரே நாளில் அந்நிறுவனம் சந்திக்கும் மோசமான சரிவு இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதே நேரத்தில் பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் 15.8 பில்லியன் குறைந்துள்ளது. இதனால் அவரது சொந்து மதிப்பு 70 பில்லியன் டாலருக்குக் ( இந்திய மதிப்பில் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்) கீழே சென்றுவிட்டது.