சனி, 21 ஜூலை, 2018

பெண்களுக்கு பாதுகாப்பான நாடு அல்ல”: சென்னை ஸ்குவாஷ் போட்டியில் பங்கேற்ற ஸ்விட்சர்லாந்து வீராங்கனைக்கு தடை! July 20, 2018

Image


ஏறக்குறைய பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் குறித்த செய்திகள் இல்லாத நாளே இந்தியாவில் இல்லை என்ற நிலை நிலவி வரும் சூழலில் இந்த சம்பவங்களால் நம் நாடு மறைமுகமாக இழந்து வரும் மதிப்பை உணர்த்தும் விதமான செய்தி தான் இது.

உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டித்தொடர் சென்னையில் கடந்த 18ஆம் தேதி தொடங்கி வரும் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் அமெரிக்கா, ஈரான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து என 28 நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 171 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.

சென்னையில் நடைபெறும் இப்போட்டியில்  ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை ஒருவர் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். Ambre Allinckx என்ற அந்த ஸ்விஸ் வீராங்கனை அந்நாட்டின் சிறந்த நிலை வீராங்கனையாக அறியப்படுகிறார்.

இந்தியாவில் அண்மைக்காலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியா உள்ளதாகவும் இணையம் வாயிலாக அவருடைய பெற்றோர் அறிந்ததாகவும் அதன் காரணமாக இந்தியாவிற்கு தனது மகளை அனுப்பி ஆபத்தை எதிர்கொள்ள விரும்பாததால் சென்னையில் நடைபெறும் இப்போட்டிக்கு அவரை அவரின் பெற்றோர் அனுப்ப மறுத்துள்ளதாக ஸ்விட்சர்லாந்து பயிற்சியாளர் Pascal Bhurin கூறியுள்ளார்.

இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள ஈரான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளை தனியாக வெளியே செல்ல வேண்டாம் என அணி நிர்வாகங்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. சில வீராங்கனைகள் சரியான முறையில் ஆடை உடுத்திக்கொண்டு வெளியே செல்ல தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஈரானைச் சேர்ந்த நிக்கி என்ற வீராங்கனையில் தந்தை அமீர் என்பவர் கூறும்போது, நாங்களும் அது போன்ற செய்திகளை அறிந்தோம், என்னுடைய மகள் எப்போதும் அணியினருடனே இணைந்து இருக்குமாறு கூறியுள்ளேன், அவருக்கு இது பரீட்சயமில்லாத நாடு மற்றும் மொழி ஆகிய காரணங்களுக்காகவும் அவ்வாறு அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.

இதே போல ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் ஹேய்டன் கூறும்போது, நியூஸிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்லும் போது பாதுகாப்பாக உணர்கிறோம், இங்கு ஒரு நபர் எப்போதும் எங்களுடன் இருப்பதை போல் பார்த்துக்கொள்கிறோம் என்றார்.