இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம் நேற்று நிகழ்ந்தது. நிலவின் மீது படவேண்டிய சூரிய ஒளியை பூமி மறைத்துக் கொள்ளும்போது சந்திர கிரகணம் உருவாகிறது.
அப்போது, சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும். இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேரம் கொண்ட சந்திர கிரகணம் நேற்றிரவு 11.54 மணிக்கு தோன்ற ஆரம்பித்தது.
முழு கிரகணம் இன்று அதிகாலை 1 மணிக்குத் தொடங்கி அதிகாலை 2.43 மணி வரை நீடித்தது. தொடர்ந்து பகுதி சந்திரகிரகணம் அதிகாலை 3.49 மணிக்கு தெரிந்தது. சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கத்தில், சந்திர கிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, 5 தொலைநோக்கிகள் மூலம் பொதுமக்கள் சந்திர கிரகணத்தை பார்த்து ரசித்தனர். கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில், இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நிகழ்ந்தது.
இரவு 11.54 மணியளவில் தொடங்கிய சந்திர கிரகணம், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. செந்நிறத்துடன் காணப்பட்ட நிலவை, பல்வேறு நாடுகளிலும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.