திங்கள், 30 ஜூலை, 2018

போலி ஆப்கள் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்களை திருடிய மர்ம மனிதன் July 30, 2018

போலி வங்கி ஆப்கள் மூலம் தனியார் வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் விவரங்களை திருடிய மர்ம மனிதன் பற்றிய செய்தி வெளியாகி வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மக்களின் பணம் பல்வேறு வகைகளில் கொள்ளையடிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வளர்ந்துள்ள தொழில்நுட்பம் மூலம் புதிது புதிதாக மக்கள் சுரண்டப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில் தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் புகழ் பெற்ற தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, ஆர்.பி.எல் மற்றும் எச்.டி.எப்.சி ஆகிய வங்கிகளின் போலி ஆப் மூலம் வாடிக்கையாளருக்கு தங்களின் கிரெடிட் கார்டுகளில் உள்ள தொகையை அதிகப்படுத்தி தருவது போல குறுஞ்செய்தி அனுப்பி, ஆப்பை டவுண்லோடு செய்யும் லிங் அனுப்பப்படுகிறது.



அந்த போலி ஆப்பை டவுண்லோடு செய்தவுடன் வாடிக்கையளர்களின் விவரங்களை பெறும் வகையில் இரு படிவங்கள் திரையில் தோன்றுகிறது. பின்னர் அனைத்து விதமான கிரெடிட் கார்டு விவரங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் ரகசிய வங்கி தகவல்கள் பெறப்படுகிறது. இதனை தொடர்ந்து “எங்களது வங்கி ஊழியர்கள் உங்களை விரைவில் தொடர்புகொள்ளுவார்கள்” என உறுதி செய்யும் செய்தி இறுதி திரையில் வருகிறது.  இவை அனைத்தும் முடிந்தவுடன் அந்த கார்டில் உள்ள பணம் கொள்ளையடிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நூதன தகவல் மற்றும் பணத் திருட்டு பற்றி சமீபத்தில் அந்தந்த வங்கிகள் மூலம் தெரியவந்துள்ளது. உடனடி நடவடிக்கையாக கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள போலி ஆப்கள் நீக்கப்பட்டுவிட்டதாக வங்கிகள் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கிறது. 



மேலும் இந்த போலி ஆப்களை யார் யார் இயக்குவது என்று கண்டறிய திட்டமிட்ட நிலையில், வங்கி தொழில்நுட்ப ஊழியர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியுள்ளது. இந்த மூன்று வங்கிகளின் போலி ஆப்களும் ஒரே நபரால் வேறு வேறு பெயர்களில் நிறுவப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போலி ஆப்கள் அதிகாரப்பூர்வ ஆப்கள் போல தெரிவதற்கு 100-க்கும் மேற்பட்ட உபகரணங்கள் மூலம் முன்னதாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.



கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்த போலி ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் உலா வந்துள்ளது. எனினும் இந்த நூதன தகவல் திருட்டில் பாதிக்கப்படோர் பற்றிய தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை. தொடர்ந்து போலி மற்றும் அபாயகரமான ஆப்களை தனது தளத்தில் இருத்து நீக்கி வரும் கூகுள் நிறுவனம் வங்கிகள் மீது குற்றஞ்சாட்டியுள்ளது. தொடரும் இதுபோன்ற நூதன தகவல் திருட்டுகளால் அச்சமடைந்துள்ள மக்களுக்கு இது போன்ற செய்தி மேலும் ஒரு இடியாக இருக்கும்.