சனி, 28 ஜூலை, 2018

இந்தியா முழுவதும் குறைந்து வரும் புலிகளின் எண்ணிக்கை! July 28, 2018

Image


இந்தியா முழுவதும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் புலிகளை பாதுகாக்க பொதுமக்கள் முன் வர வேண்டும் என்று வனத்துறை அதிகாரி வேண்டுகோள் விடுத்தார். 
 
நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பக வனத்துறை சார்பில் களக்காடு 
தலையணையில் உலக புலிகள் தின விழா நடந்தது. விழாவிற்கு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்ட அதிகாரி கணேசன் தலைமை வகித்தார், இதையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வனத்தை பற்றியும், வன விலங்குகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சூழல் மேம்பாட்டு திட்ட அதிகாரி கணேசன் பரிசுகள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த காலத்தில் சுற்றுசூழல் மிகவும் இன்றியமையாதது ஆகும். சுற்றுசூழல் சரியாக தெரியாவிட்டால் நமக்குதான் பாதிப்பு எற்படும் என்றார்.

எனவே மாணவர்கள் சுற்றுசூழலை தெரிந்து கொண்டு வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தியா முழுவதுமே புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது 2,626 புலிகள் மட்டுமே உள்ளன என்று குறிப்பிட்ட அவர் புலிகளை பாதுகாப்பது குறித்து இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதற்காகவே மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றும், அதனடிப்படையில் மாணவர்களுக்கு புலிகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். புலிகள் எண்ணிக்கை குறைய வேட்டையாடுதல் முக்கிய காரணம் ஆகும் என்ற கூறிய அவர் எனவே வேட்டையாடுதலை தடுக்க வேண்டும்.

புலிகளை பாதுகாப்பது பொதுமக்களது கடமை ஆகும். புலிகளுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு புலிகளை பாதுகாக்க பொதுமக்கள் முன் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட்டால் புலிகள் கண்டிப்பாக பாதுகாக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகம் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகும் என்று பெருமையுடன் தெரிவித்த அவர். எந்தளவிற்கு நாம் காட்டை பாதுகாக்கிறமோ, அந்தளவிற்கு நமக்கு நன்மை ஏற்படும் என்று உறுதியுடன் தெரிவித்தார். அதன் பின் மாணவ-மாணவிகள் தலையணைக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.