காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் என அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி எச்சரித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்துவது, மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிரான வியூகம், பாஜகவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற முதல் காரிய கமிட்டி கூட்டம் இதுவாகும். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா பேசுகையில், மக்களவையில், அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்த விதத்தை வைத்துப் பார்க்கும் போது, மத்திய அரசு அகற்றப்படுவதற்கான கவுண்ட் டவுன் போல் அமைந்து விட்டது எனக் குறிப்பிட்டார்.
பிற கட்சிகளுடன் இணைந்து மிகப்பெரிய தேர்தல் கூட்டணி காங்கிரஸ் தலைமையில் உருவாக்கப்படும் என்றும், ராகுல் காந்தியின் தேர்தல் வியூகங்களுக்கு முழு ஆதரவு அளிப்போம் என்றும் சோனியா தனது உரையில் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பாஜகவிற்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தில் தாம் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். கட்சியில் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது எனக் குறிப்பிட்ட ராகுல்காந்தி, அதே நேரம் தவறான தகவல்களை கூறி தமது போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும் தலைவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன் என்றும் ராகுல்காந்தி எச்சரித்தாகத் தகவல்கள் கூறுகின்றன.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பான வேலைகளில் ஈடுபட குழு அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி, நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கட்சிகளை ஒன்றிணைத்து காங்கிரஸ் வலுவான கூட்டணி அமைக்கும் என்றும், கூட்டணி குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைவர் ராகுல்காந்திக்கு காரியக் கமிட்டி முழு அதிகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.