வெள்ளி, 30 நவம்பர், 2018

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல விவசாயிகள் திட்டம்! November 30, 2018

Image

வேளாண் கடனை தள்ளுபடி செய்யக் கோரி டெல்லியில் குவிந்துள்ள விவசாயிகள், திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தை நோக்கி இன்று பேரணியாக செல்வோம் என அறிவித்துள்ளனர்.

விவசாய விளை பொருட்களுக்கு  லாபகரமான விலை வழங்க
வேண்டும் - பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி,டெல்லியில் மாபெரும் போராட்டத்தை அகில இந்திய கிஷான் சங்கம் ஒருங்கிணைக்கிறது. 2 நாட்கள் நடக்கும் இப்போராட்டத்திற்காக நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்து 207 விவசாய சங்கங்களைச் சேர்ந்த பல லட்சம் விவசாயிகள் டெல்லி வந்துள்ளனர். 

இதனிடையே, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா டெல்லி வந்துள்ளார். போராட்டம் நடைபெற உள்ள ராம்லீலா மைதானத்திற்கு செல்லும் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் பிரச்னையை தீர்க்க பிரதமர் மோடி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். விவசாயிகள் விழித்துக் கொண்டு விட்டதாக தெரிவித்த தேவகவுடா, எப்படி தண்டிக்க வேண்டும் என்பதும் விவசாயிகளுக்கு நன்றாகவே தெரியும் என எச்சரித்தார்

திமுக தலைமையில் தோழமை கட்சிகள் கூட்டம்: மேகதாது அணைக்கு எதிராக சிறப்பு தீர்மானம்! November 29, 2018

Image

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து, டிசம்பர் நான்காம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில், எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட தோழமை கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில், மேகதாது அணைக்கு எதிராக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உடடினயாக சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தை கூட்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

விடுதலை புலிகள் வெளியிட்ட அறிக்கை; இலங்கை அரசு பேரதிர்ச்சி! November 29, 2018

இலங்கை இறுதிக்கட்ட போரில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் எனவும் அந்த இயக்கம் தற்போது எங்கள் நாட்டில் இல்லையெனவும் கூறி வந்த இலங்கை அரசுக்கு தற்போது பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் விடுதலை புலிகள் வெளியிட்ட அறிக்கைதான். 

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது கடந்த 2009ம் ஆண்டு விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என அறிவித்த அந்நாட்டு அரசு, அதற்கான புகைப்படங்களை வெளியிட்டு உலக தமிழர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து தங்களது நாட்டில் விடுதலை புலிகள் இயக்கம் இல்லை எனவும், இறுதிக்கட்ட போரில் சரணடைந்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும் அப்போதைய ராஜபக்சே அரசு தெரிவித்தது. இதனை முற்றிலும் மறுத்த தமிழ் ஆர்வலர்களான  பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்டோர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் எனவும் தக்க நேரத்தில் வெளிவருவார் எனவும் அறிவித்தனர். அதே சமயத்தில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும், விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் உயிர்ப்புடன் இருப்பதாக, திரும்பத் திரும்ப தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சூழலில், தற்போது, மாவீரர் தினம் தொடர்பாக, விடுதலைப்புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படும் ஒரு அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

தமிழீழத்தை மீட்டெடுக்க மாவீரர்கள் காட்டிய வழியில் தொடர்ந்து போராடுவோம் எனவும் விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் வெளியீடாக வந்துள்ள இந்த அறிக்கை பல்வேறு சந்தேகங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் வித்திட்டுள்ளது. ராஜபக்சே பிரதமராவதில்  சிக்கல்கள் நீடிக்கும் நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பு உயிர்ப்புடன் இருப்பதாக கட்டமைக்கப்படுவதால், அரசு அதிகாரத்தில் ராஜபக்சே இருக்க வேண்டும் என்கிற கட்டாயத்தை உருவாக்க முயற்சிகள் நடப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், விடுதலைப்புலிகளை ஆயுதமாக, கையில் எடுத்து, அரசியல் கணக்கை ராஜபக்சே தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.  

இந்த பின்னணியில் பார்க்கும் போது, அறிக்கையில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சம் இடம்பெற்றுள்ளது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு முழு ஆதரவு அளித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் துரோகம் இழைத்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்துள்ளதால், அவர்கள் மீதான இந்த துரோக குற்றச்சாட்டு, ராஜபக்சேவின் தேவையை அழுத்தமாக பதிய வைக்கும் நுண் அரசியலாக அணுக வாய்ப்பு உள்ளது. தாயகக் கனவுடன் போராடி மாண்ட விடுதலைப் புலிகள் சார்பில் வெளியாகியுள்ள இந்த அறிக்கை, தமிழர்களுக்கு ஆதாயம் தருமா? ஆபத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

சிலைகளின் நாயகன் பொன்.மாணிக்கவேல்! November 30, 2018

Image

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவைக் கூடுதலாகக் கவனித்து வந்த ரயில்வே போலீஸ் ஐஜி பொன்.மாணிக்கவேலின் பதவிக் காலம் இன்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.
பொன்மாணிக்கவேல்.... மிடுக்கான நடை... கம்பீரமாக தோற்றம்... யாருக்கும் அஞ்சாத தீரம்... இவரின் தோற்றத்தைப் பார்க்கும் யாரையும் வசீகரிக்கும் நிஜக் காவல் அதிகாரி... பெரும் முதலாளிகளின் அந்தப்புரங்களில் புதைந்துக் கிடந்த கோவில் சிலைகளில், தோண்டி எடுத்து தமிழகத்திற்கு இவர் காட்டிய போது தான் சிலைகளின் மதிப்பையே தமிழகம் உணர்ந்து கொண்டது. நம்மை விட சோழர்கால சிலைகளைக் கொண்டாடும் வெளிநாட்டினர் பல ஆண்டுகளுக்கு முன்பே அவற்றை தங்கள் வீட்டின் அடுக்கறைகளில் பூட்டி அலங்கார பொருட்களாக மாற்றினர். தமிழகத்தின் வேர்களில் இருந்த அந்த சிலைகள் எங்கெங்கு சென்றன என்பதை இவர் அக்கு வேர் ஆணி வேராக பிரித்துக் காட்டிய போது, நாம் மலைத்துப் பார்த்தோம்.
1996 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி. இன்றைய செங்கல்பட்டு கிழக்கு காவல் உட்கோட்ட  டிஎஸ்பியாகத்தான் சென்னைக்குள் முதலில் நுழைந்தார். பொன். மாணிக்கவேலின் சர் வீஸ் பக்கங்களில், பல அதிகாரங்களின் கீறல்களைப் பார்க்க முடியும்.... அரசியல்வாதிகளால், பந்தாடப்பட்டு, ஊர் ஊராக மாற்றப்பட்டதையும் உணர முடியும். இருப்பினும், சிலைகள் தான் பொன் மாணிக்கவேலை தமிழகத்திற்கு அடையாளம் காட்டின.  
தமிழகக் கோயில்களில் திருடப்பட்ட 155 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்பு, 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கடத்தப்படுவது முறியடிப்பு என்று நிறைவாகவே இருந்திருக்கிறது, அவரது காவல் பணி.
15 ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் இருந்து ஒரு கோடி 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1,040 ஆண்டுகள் பழமையானது சிலைகள் திருடப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டது. இதனை தெரிந்து கொண்ட பொன்.மாணிக்கவேல் அதனை மீட்டெடுத்தார். இதன் தொடர்ச்சியாக, சிலை கடத்தல் தொடர்பாக இவர் அடுக்கிய பட்டியல் தமிழகத்தையே உலுக்கியது. அத்துடன், ராஜராஜ சோழன் சிலை, இளவரசி லோகமாதேவி சிலையை குஜராத்தின் அருங்காட்சியகத்திலிருந்து மீட்டு வந்து தமிழகத்தின் கிரீடத்தில் சூட்டினார். 
பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன், மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடுகளில் அதிரடியாக நுழைந்து சிலைகளை மீட்டெடுத்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் மோசடி நடந்தது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதாவை கைது செய்து ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்தார். இதனால், தமிழக அரசியலில், சிறிது சலசலப்பு ஏற்பட்டது. 
பொன்.மாணிக்கவேல், எடுத்த அடுத்தடுத்த நடவடிக்கையால், கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 27 புராதனச் சிற்பங்கள், சிலைகள், விக்ரகங்கள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. சிலை கடத்தல் விவகாரத்தில், ஒரு பிரிவினருக்கு ஆதரவாக பொன்.மாணிக்கவேல் செயல்பட்டதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு உண்டு.  
பொன் மாணிக்கவேலின் நேர்மையால், பிரபுதேவாவை நாயகனாக கொண்டு திரைப்படம் ஒன்றும் தயாராகி வருகிறது. சிலைக்கடத்தல் மர்மங்கள் முழுதாக வெளிச்சத்திற்கு வர காலங்கள் பல ஆகும் ஆனால், இந்த விஷயத்தில், பொன்.மாணிக்கவேல் என்கிற பெயர் எப்போதும் உச்சரிக்கப்படும்.

வியாழன், 29 நவம்பர், 2018

மெரினா கடற்கரையில் கடந்த ஒரு வாரமாக ஏற்பட்ட நுரைக்கு என்ன காரணம்? November 29, 2018

பருவமழை துவங்கும் போது சென்னையில் கடற்கரை பகுதியில் தொடர்ந்து நுரை ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. கடந்த வியாழக்கிழமை மெரினா முதல் பெசண்ட் நகர் வரை உள்ள கரைப்பகுதி முழுவதும் நுரை காணப்பட்டது, இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்ன?
பார்ப்பதற்கு மட்டும் அல்ல நின்று சுவாசிப்பதற்கு கூட முடியாத நிலையில் இருக்கும் இந்த இடம் தான் கூவம் நதியின் முகத்துவாரம்.



இதே போல் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழில் மிகுந்து காட்சி அளித்த அடையாறு போன்ற நதியின் நிலைமையும் இதே போல் தான், பொதுவாக வடகிழக்கு பருவமழை துவங்கும் போது பெய்யும் முதல் கனமழையின் போது முகத்துவார பகுதிகளில் தேங்கி உள்ள குப்பைகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய ரசாயன கழிவுகள் என ஒட்டுமொத்தமாக கடலில் கலக்கின்றன.
கடந்த வாரம் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 15 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்தது, இதனையடுத்து முகத்துவார பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக வெளியேறிய சில மணி நேரங்களில் கடலில் இருந்து அதிகபடியான நுரை வெளிப்பட்டது.
மெரினா முதல் பெசண்ட் நகர் வரை நுரை காணப்பட்ட நிலையில்,தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக ஆய்வு மேற்கொண்டது. இதில், வீடுகளில் பயன்படுத்தும் டிடர்ஜெண்ட், சில ஆலைகளின் ரசாயன கழிவுகள் அதிகபடியாக வெளியேறிய காரணத்தால் நுரை ஏற்பட்டு உள்ளதாகவும், இதனால் கடல் மாசு ஏற்பட்டுள்ளதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
உலகில் 60% ஆக்சிஜனை பவளப்பாறைகள் உற்பத்தி செய்வதாகவும்,அத்தகைய பாறைகள் மன்னார் வளைகுடா பகுதிகளில் அதிகம் இருப்பதாக கூறும் இயற்கை ஆர்வலர் வெற்றிச்செல்வன், கடல் மாசால் ஆக்ஸிஜன் உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் கூறுகிறார்.
மேலை நாடுகளில் கழிவுநீரை குடிநீராக மாற்றும் திட்டம் இருப்பதாக கூறும் சூழலியல் ஆய்வாளர் நித்யானந்த் ஜெயராமன், முகத்துவார பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பை, ரசாயனம் போன்றவை மறுசுழற்சி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.
ஏற்கனவே பல இயற்கை மாற்றங்களை எதிர்நோக்கி வரும் நாம், தலைமுறை சூழல் பாதுகாப்பு குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே நிதர்சனம்.

புதன், 28 நவம்பர், 2018

பூமியை கண்காணிக்கும் Hy-SIS செயற்கைகோளை நாளை விண்ணில் ஏவுகிறது இந்தியா! November 28, 2018

Image

பூமியை கண்காணிக்கும் Hy-SIS செயற்கைகோள் நாளை பி.எஸ்.எல்.வி-சி 43 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ள நிலையில், அதற்கான 28 மணிநேர கவுண்டவுன் இன்று காலை 5.57 மணிக்கு துவங்கியது.

பூமியின் நிலப்பகுதி, வானிலை உள்ளிட்டவற்றை துல்லியமாக கண்காணிக்கும் வகையில் Hy-SIS செயற்கைகோளை, பி.எஸ்.எல்.வி-சி 43 ராக்கெட் மூலம் இஸ்ரோ, நாளை காலை 9.57 மணிக்கு விண்ணில் ஏவ உள்ளது. இந்த ராக்கெட் 380 கிலோ எடை கொண்டது எனவும், Hy-SIS செயற்கைகோள் பூமியில் இருந்து 636 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது எனவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Hy-SIS செயற்கைக்கோளோடு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட  8 நாடுகளின் 30 செயற்கைகோள்களையும் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதில் ஒன்று மைக்ரோ செயற்கைக்கோள் எனவும், மற்ற 29ம் நானோ செயற்கைக்கோள் எனவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டமன்ற தேர்தல்! November 28, 2018

Image


மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. 
இதையொட்டி, இரண்டு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தில் 230 தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தமுள்ள, 230 தொகுதிகளில், இரண்டாயிரத்து 907 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுமார் 5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இதேபோன்று வடகிழக்கு மாநிலமான மிசோரமில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 
இங்கு, 209 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வட கிழக்கு மாநிலங்களில் மிசோரமில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளதால், அதனை தக்க வைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு மாநிலங்களுக்கும் வரும் டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. 

விடுதலை புலிகள் இயக்கம் சார்பில் வெளியான அறிக்கையால் பரபரப்பு! November 28, 2018

Image

தமிழீழத்தை மீட்டெடுக்க மாவீரர்கள் காட்டிய வழியில் தொடர்ந்து போராடுவோம் என்று விடுதலை புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது.

விடுதலை புலிகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெயருக்காகவும், புகழுக்காகவும் தமது வீரர்கள் போராடவில்லை என்றும் இனம், மொழி, பண்பாடு மீதான அடக்குமுறைக்கு எதிராகவே போராடியதாக தெரிவித்துள்ளது.

கொத்துக்குண்டுகள் வீசி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை, பொய் பிரச்சாரம் செய்து வருவதோடு, சர்வதேச விசாரணையையும் ஏற்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளது.

தமிழீழத்தில் நல்லாட்சி நடப்பதாய் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுவது தமிழர்களுக்கு இழைக்கும் துரோகம் என்றும், இலங்கையில் ஆட்சி மாறும் போது, அதன் தலைவர்கள் இந்திய சார்பிலிருந்து தடம் மாறுவதை இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தமிழீழம் இந்தியாவின் நட்பு நாடாகவே விளங்கும் என, பிரபாகரன் கூறியதை கவனத்தில் கொள்வதுடன், தமிழீழ முக்கியத்துவத்தை உணர்ந்து இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஈழத் தமிழர்கள், எப்போதும் இந்திய இறையாண்மைக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதை கருத்தில் கொண்டு, விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

சிங்கள அரசின் பொய் முகத்தை உலகத்துக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்நாளில் உறுதி ஏற்போம் என கேட்டுக்கொண்டுள்ளது. 

பனிப்பொழிவால் குட்டி சிம்லாவாக மாறிப்போன உதகை! November 28, 2018

Image

உதகையில் உறைபனிப் பொழிந்து வருவதால் அதிகாலை நேரங்களில் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல புல்வெளிகள் காட்சி அளித்து வருகின்றன. 
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம்  வரை பனிக்காலம் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு புயல் மற்றும் தொடர் மழை பொய்து வந்ததால் பனிப்பொழிவு தாமதமானது. கடந்த சில தினங்களாக கடும் குளிர் நிலவி வந்த நிலையில் நீர் பனிப்பொழிவு காணப்பட்டது. இந்நிலையில் தற்போது பகல் நேரங்களில் நல்ல வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கடுங்குளிரும் தொடர்ந்து நிலவுகிறது. 

பனிப்பொழிவு காரணமாக இன்று அதிகாலை உதகை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உறைபனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் புள்வெளிகள் வெள்ளை நிற கம்பளம் போர்த்தியது போல காட்சியளித்தது. இனி வரும் நாட்களில் பனி பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. தற்போது குளிரின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. 

​மத உணர்வுகளை காயப்படுத்தியதாக செயற்பாட்டாளர் ரெஹனா ஃபாத்திமா கைது! November 27, 2018

கேரள மாநிலம் சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதியளித்து உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்த நிலையில் கடந்த அக்டோபர் 19ம் தேதியன்று மலைக்கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் ரெஹனா ஃபாத்திமா என்ற 31 வயது இளம்பெண் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த கவிதா ஆகியோர் செல்ல முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் அய்யப்ப பக்தர்களின் கடும் போராட்டத்தையடுத்து சபரிமலையில் பக்தர்களை தவிர்த்து செயற்பாட்டாளர்களுக்கு அனுமதியில்லை என்று கேரள அரசு அறிவித்ததைத்தொடர்ந்து ரெஹனா ஃபாத்திமா மற்றும் கவிதா ஆகியோர் மீண்டும் பம்பைக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக மாறியது.

BSNL-ல் பணியாற்றி வந்த, ரெஹனா ஃபாத்திமா ஹிந்து மத உணர்வுகளை காயப்படுத்தியதாகக் கூறி இஸ்லாம் மதத்தில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இந்து மத உணர்வுகளை தாக்கிப் பேசியும், காயப்படுத்தும் விதத்தில் புகைப்படங்கள் பகிர்ந்ததாகவும் ரெஹனா மீது பத்தினம்திட்டா காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ன மேனன் என்பவர் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து ரெஹனா மீது மத உணர்வுகளை காயப்படுத்துதல் ( 153A) பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தான் கைது செய்யப்படக்கூடும் என்று கருதி கேரள உயர்நீதிமன்றத்தில் ரெஹனா முன் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கொச்சியில் இருந்த ரெஹனா இன்று காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். விரைவில் கோர்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


 சபரிமலை விவகாரம் மட்டுமல்லாது இதற்கு முன்னதாக Kiss of Love என்ற இயக்கத்தின் மூலமாக பொது இடங்களில் முத்தம் கொடுக்கும் போராட்டமும், இந்த ஆண்டு மார்ச்சில் நிர்வான போராட்டத்திலும் (தண்ணீர்ப்பழம் கொண்டு மார்பகங்களை மூடுதல்) ஈடுபட்டு சில சர்ச்சைக்களில் சிக்கியுள்ளவர் ரெஹனா ஃபாத்திமா.

இன்ஜினியரிங் படிப்பை முடிக்காமல் திணறிவந்த மாணவனை வீட்டிற்கு அனுப்பிய நீதிமன்றம்! November 27, 2018

Image

குருஷேத்ரா பல்கலைக் கழகத்தில், கடந்த 9 வருடங்களாக பி.டெக் பட்டத்தை முடிக்க முடியாமல் திணறிய மாணவன் அளித்த கருணை மனுவை ஹரியானா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

17 பாடங்களில் இன்னும் தேர்ச்சியடையாமலிருக்கும் அந்த மாணவன், 2009ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்துள்ளார். இத்தனை ஆண்டுகளாகியும் தேர்ச்சியடைய முடியாமல் திணறிவந்துள்ள அவர் மீதமுள்ள பாடங்களில் தேர்ச்சியடைய மேலும் 4 ஆண்டு கால அவகாசம் கேட்டு ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த  நீதிபதியோ, அரசின் வளங்களை சீரழிக்கும் இது போன்ற ஆட்களிடம் கருணை காட்ட முடியாது, மேலும் இந்த மாதிரியான விஷயங்களை இனிமேலும் ஊக்குவிக்க முடியாது என கூறியுள்ளார். இதையடுத்து அந்த மாணவன் இன்னும் ஒரே ஒருமுறை பரீட்சை எழுத வாய்ப்பளிக்குமாறு கெஞ்சியுள்ளார். 

ஆனால் நீதிமன்றமோ, "செலுத்திய கட்டணத்தை காட்டிலும் கல்லூரி நிர்வாகம் உங்களுக்கு நிறைய பணி செய்துவிட்டது. இத்தனை ஆண்டுகளாக தேர்ச்சியடைய முடியாமல் திணறிவரும் உங்களால் கடைசி ஒரு வாய்ப்பில் எப்படி தேர்ச்சியடைய முடியும்? வேறு ஏதாவது படித்துக் கொள்ளுங்கள், இன்ஜினியரிங் உங்களுக்கு வேண்டாம்" எனக்கூறி அனுப்பியுள்ளது.

இந்த செய்தி தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

செவ்வாய், 27 நவம்பர், 2018

If you had $430 million dollars, would you feed the poor or build a massive statue? From our all-video page teleSUR Play.



Source: FB Kaalaimalar 2.0

​திருடிய பெட்டியை திறந்தபொழுது பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! November 26, 2018

Image

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் வசிக்கும் பெண் ஒருவர் பொருள் ஒன்றை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துள்ளார். அந்த பொருள் அவரது வீட்டிற்கே டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அந்த பெட்டியை வீட்டு வாசலிலேயே வைத்துச்சென்றுவிட்டார் டெலிவரி செய்பவர். 

ஆர்டர் செய்யப்பட்ட பொருள் வீட்டு வாசலிலேயே வைக்கப்பட்டதை பார்த்த பக்கத்துவீட்டு பெண்மணி, அந்த பெட்டியை  யாருக்கும் தெரியாமல் எடுத்து தன் வீட்டில் வைத்துள்ளார். பின்னர், பெட்டியை திறந்து பார்த்த பொழுது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பெட்டி முழுவதும் புழுக்களை பார்த்ததால் பயத்தில் வீட்டிற்கு வெளியே ஓடிச்சென்றுள்ளார்.

இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து ஆன்லைனில் ஆர்டர் செய்த பெண்ணிடம் விசாரித்த பொழுது தன் மகன் பியர்டட் டிராகன் எனப்படும் பல்லி வகையை சேர்ந்த உயிரினத்தை வளர்த்து வருவதாகவும் அதற்கு உணவாக கொடுப்பதற்காக ஆன்லைனில் புழுக்களை ஆர்டர் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து பெட்டியை திருடிய பெண்ணை நெட்டிசன்கள் பலவாறு விமர்சித்து வருகின்றனர். 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் சோகம் சொல்லில் அடங்காதது : மத்தியக்குழுவின் தலைவர் பேட்டி! November 26, 2018

Image

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் சோகம் சொல்லில் அடங்காதது என்று, கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வரும் மத்தியக்குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார். 

உள்துறை அமைச்சக இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் மத்தியக் குழு கடந்த இரு தினங்களாக கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்று நாகை மாவட்டம் விழுந்தமாவடி,  வேதாரண்யம், புஸ்பவனம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். புயலால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் மத்திய குழுவினரின் காலில் விழுந்து கதறினர். 

புஸ்பவனம் மீனவ கிராமத்தில் சேற்றில் மூழ்கிய வீடுகளை கண்டு மத்திய குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் சோகம் சொல்லில் அடங்காதது என்று கூறினார். ஒரு சில இடங்களை பார்க்கும் போதே பாதிப்பு தெரிவதாகவும், அதனால் மற்ற இடங்களை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார். தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

இதனைத்தொடர்ந்து புயல் பாதித்த காரைக்காலுக்கு சென்ற மத்திய குழு, பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். சேதங்களை மதிப்பீடு செய்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தும் குறைகளை கேட்டறிந்தனர். பின்னர், ஆய்வுப்பணியை முடித்தபின் அக்குழுவினர் புதுச்சேரி சென்றடைந்தனர்.  நாளை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பேச உள்ளனர்.

திங்கள், 26 நவம்பர், 2018

எஸ் பி யதிஷ் சந்திரா இட மாற்றம்! November 26, 2018

Image

சபரிமலை நிலக்கலில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ் பி யதிஷ் சந்திரா மாற்றம். ஏற்கனவே வகித்து வந்த திருச்சூர் கமிஷனராக மாற்றி கேரளா அரசு உத்தரவு.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி பாஜகவினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் தொடர்ந்து சரண கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தி வரும் நிலையில் போராட்டத்தை கட்டுப்படுத்த நிலக்கல், பாம்பை, சன்னிதானம் உட்பட ஐந்து பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் அங்கு தரிசனத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை நிலக்கல் பகுதியில் தடுத்து அவரை மட்டும் காரில் அனுமதிக்கலாம் என எஸ்பி யதிஷ் சந்திரா கூறியதை தொடர்ந்து அமைச்சருக்கும் எஸ்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் எஸ்பி ஏற்கனவே வகித்து வந்த திருச்சூர் கமிஷனராக மாற்றி கேரளா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் திருச்சூர் எஸ் பியாக இருந்த புஷ்பாகரனை நிலக்கல் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாளை மீண்டும் கேரளா சட்ட சபை கூடும் நிலையில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்ப உள்ளதால் முன் கூட்டியே அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

டிவி, ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் விலை 8 சதவீதம் வரை உயர்கிறதா? November 25, 2018

Image

டிவி, ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் விலை, அடுத்த மாதம் முதல் உயரும், என தகவல் வெளியாகியுள்ளது. 

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சுங்க வரி உயர்வு எதிரொலியாக, வீட்டு உபோயகப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் செலவு, கணிசமாக அதிகரித்துள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என பண்டிகைக் காலத்தில் வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை, அதிகமாக இருப்பது வழக்கம். இந்நிலையில், அடுத்த மாதம் முதல், டிவி, ஏசி, பிரிட்ஜ் போன்றவற்றின் விலை, 8 சதவீதம் வரை உயரும், என தகவல்கள் தெரிவிக்கின்றன.

​ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விவகாரத்தில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! November 26, 2018

Image

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கில் முன்ஜாமின் கோரி தொழிலதிபர் வேணு சீனிவாசன், முத்தையா ஸ்தபதி, அறநிலையத்துறை ஆணையர் திருமகள் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது.

அப்போது ஆஜரான ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், இந்த வழக்கில் தொடர்புடையவர்களில் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆவணங்கள் இருப்பதாக கூறினார்.

இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை, வழக்கு தொடர்பான 2,100 ஆவணங்கள் 2009 - 2013-ம் ஆண்டுகளில் அழிக்கப்பட்டுவிட்டதாக  தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்த நிலையில், இந்த மாதத்துடன் பணி ஓய்வு பெறும் நிலையில் தனக்கு பின்னால் சதி நடப்பதாகவும், தனக்கு எதிராக சிபிசிஐடியில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் கூறினார்.

பெண் எஸ்.பி ஒருவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு வந்து விசாரணை ஆவணங்களை கேட்பதாகவும், சிலை கடத்தல் தடுப்பு குழுவினர் குறித்து தவறான கருத்துகள் பரப்பப்படுவதாகவும் ஐஜி பொன். மாணிக்கவேல் தெரிவித்தார்.

நீதிமன்றத்துக்கு தெரிவிக்காமல், ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக  எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் அளிக்கவும் ஐ.ஜி.பொன். மாணிக்கவேலுவுக்கு அனுமதி அளித்தனர்.

கஜா புயல் பாதித்த பகுதிகளில், இன்றுடன் நிறைவடைகிறது மத்திய குழுவின் ஆய்வு! November 26, 2018

Image

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில், கடந்த இரு நாட்களாக ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு, இன்று நாகை மாவட்டத்தை பார்வையிட உள்ளது.

இன்று காலை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாதிக்கப்பட்ட கிராமங்களில், பாதிப்புகளை பார்வையிடும் மத்திய குழு, பின்னர் மாலையில் காரைக்கால் சென்று, அங்கு பாதிப்புகளை பார்வையிடுகின்றனர். இன்றுடன் தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு ஆய்வு பணியை முடித்துக் கொண்டு புதுச்சேரி செல்லும் மத்திய குழு அதிகாரிகள், அங்கு இன்றிரவு தங்குகின்றன். பின்னர், நாளை டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். 

புயல் சேதம் தொடர்பாக தமிழக அதிகாரிகள் வழங்கிய தகவல்கள் மற்றும் சேத விவரங்களை, நேரில் மதிப்பீடு செய்த விவரங்கள் அடிப்படையிலும், முழுமையான தகவல்களை கொண்ட அறிக்கையை, மத்திய குழு தயாரித்து, நாளை அல்லது நாளை மறுநாள், மத்திய அரசிடம்  சமர்ப்பிக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.

​ செவ்வாயில் இன்று தரையிறங்குகிறது நாசாவின் இன்சைட் விண்கலம்! November 26, 2018

Image

ஆறு மாத விண்வெளி பயணத்திற்கு பின்னர், நாசாவின் இன்சைட் விண்கலம் செவ்வாயில் இன்று தரையிறங்குகிறது. 

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழல் நிலவுகிறதா இல்லையா என்பதை அறியவும், ஆய்வு செய்யவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இன்சைட் விண்கலத்தை, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அனுப்பியது. கலிபோர்னியா நகரில் விண்ணில் பறந்த இன்சைட் விண்கலம், சுமார் 50 கோடி கிலோ மீட்டர் தொலைவு பயணித்து, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்குகிறது. 

இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதாக அது எந்த நிலையில் உள்ளது என்பதை, இன்சைட் விண்கலம் மூலம் அறிந்து கொள்ள முடியும், என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

டெல்டாவை தாக்கிய கஜா; மெரினாவில் கரை ஒதுங்கிய அரிய வகை ஜெல்லி மீன்! November 26, 2018

Image

சென்னை மெரினா கடற்கரையில் அரிய வகை ஜெல்லி மீன் கரை ஒதுங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், வங்கக்கடலில் உருவான கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தென்னை, நெல் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. இந்நிலையில், அண்மையில் மெரினா கடற்கரையில் அரிய வகை ஜெல்லி மீன் கரை ஒதுங்கியது சுற்றுசூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ப்ளூ பட்டன் ஜெல்லி மீன் என அழைக்கப்படும் இந்த அரிய வகை ஜெல்லி மீன், பசிஃபிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் அதிக அளவில் காணப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த அரிய வகை ஜெல்லி மீன் பார்ப்பதற்கு மிக அழகிய தோற்றத்தில் இருந்தாலும் மிகவும் ஆபத்து நிறைந்ததாக இருக்கும் எனவும் இதனை தொட்டால் எரிச்சல், அரிப்பு போன்ற தோல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதற்கு முன்பாக 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது இந்த ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியது. தற்போது, சென்னையில் முதல்முறையாக இந்த ஜெல்லி மீன் கரை ஒதுங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கஜா புயலால் ஏற்பட்டுள்ள பருவமாற்றம் காரணமாக இந்த ஜெல்லி மீன் கரை ஒதுங்கியதா என்ற கோணத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். 

ஞாயிறு, 25 நவம்பர், 2018

திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை; நண்பர்களாகத்தான் இருக்கிறோம் - தொல்.திருமாவளவன் November 25, 2018

Image

திமுக கூட்டணியில் தாங்கள் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

விருதுநகர் வந்த திருமாவளவனை, மாவட்ட ஆட்சியாரால் பணி நீக்கம் செய்யப்பட்ட 48 துப்புரவு தொழிலாளர்கள் நேரில் சந்தித்து தங்களின் நிலை குறித்து எடுத்துரைத்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி 48 துப்புரவு தொழிலாளர்களை பணி நீக்கம் செய்த மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகக் கூறினார்.

மேலும், அவர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். திமுகவுடன் தற்போது இருப்பவர்கள் அனைவரும் நண்பர்கள் தான் என்றும், கூட்டணி கட்சிகள் அல்ல என்றும் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் கூறிய கருத்துக்கு பதில் அளித்த திருமாவளவன், திமுக கூட்டணியில் தாங்கள் இல்லை என்றும், நண்பர்களாகதான் இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டிய நாட்டுபுற கலைஞர்கள்! November 25, 2018

Image

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தருமபுரியில் நாட்டுபுற கலைஞர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து நிதி திரட்டினர்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நாட்டுபுற கலைஞர்கள் மற்றும் பம்பை இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து இப்பணியில் ஈடுபட்டனர். தருமபுரி கோட்டை காமாட்சியம்மன் கோயிலிருந்து ஊர்வலமாக பம்பை அடித்துக்கொண்டும், நடனம் ஆடியும் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து நிதி திரட்டினர்.

இதேபோல் தருமபுரி மாவட்டத்தின் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, அரூர் போன்ற பகுதிகளிலும் நாடக கலைஞர்கள் நிதி திரட்டி வருகின்றனர். இவ்வாறு திரட்டப்படும் நிதி மாவட்ட ஆட்சியரிடம் நாளை வழங்க உள்ளதாக கலைஞர்கள் தெரிவித்தனர்.

மேலும், தமிழ்நாடு நாட்டுப்புற இசை பெருமன்றத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள், மதுரையின் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டி வருகின்றனர். அதன்படி, மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் வளாகத்தில் கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் ஆட்டம், குதிரையட்டம் , நையாண்டி, தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியை இன்று நிகழ்த்தினார்கள்.

நாட்டுப்புற கலைஞர்களின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பெரும் வரவேற்பை அளித்து உதவி செய்தனர்.

சனி, 24 நவம்பர், 2018

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் November 24, 2018

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுவதாக கூறினார். தமிழகத்தில் இந்த பருவத்தில் 33 சென்டிமீட்டர் மழை பொழிய வேண்டும் என்றும், ஆனால் 30 சென்டிமீட்டர் தான் பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தமிழகத்தில் மழை அளவு இயல்பை விட 9 சதவீதம் குறைந்துள்ளதாகவும், சென்னையில் இயல்பை விட 45 சதவீதம் குறைந்துள்ளதாகவும் புவியரசன் கூறினார்

மணப்பாறையில் ஒன்பதாவது நாளாக மின் இணைப்பு இல்லாததால் பொதுமக்கள் சாலைமறியல்! November 24, 2018

Image

மணப்பாறையில் ஒன்பதாவது நாளாக மின் இணைப்பு தரவில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர்.

மணப்பாறையில் கடந்த வெள்ளிக்கிழமை கஜா புயலின் சூறைக்காற்று வீசியதில் வரலாற்றில் முதன் முறையாக புயல் காற்றின் பாதிப்பை மக்கள் உணர்ந்துள்ளனர். 3000-க்கும் மேலான மரங்களும், 1500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும், ஆயிரத்துக்கு மேலான வீடுகளின் மேற்கூரைகளும் இந்த புயலின் தாக்கத்தில் சிதிலமடைந்தது. மாவட்ட நிர்வாகத்தின் பெரும் முயற்சியால், மின் வாரிய ஊழியர்களின் கடும் உழைப்பால் நகர பகுதியில் 6-வது நாளில் 90 சதவீதம் மின் விநியோகம் தொடங்கக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து புறநகர் பகுதிகளில் அடுத்தடுத்து படிப்படியாக மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு மின்விநியோகம் அளிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

 
இருப்பினும் கிராமப் புறங்களில் மின் விநியோகம் அளிக்கும் பணி மிகவும் தொய்ந்து இருப்பதாக கூறும் தொட்டியப்பட்டி கிராம மக்கள் இன்று காலையில் பெய்து வரும் சாரல் மழையில் கொட்ட கொட்ட நனைந்தவாறு மணப்பாறை – கோவில்பட்டி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், போலீசார் சமரசம் செய்து ஓரிரு நாட்களில் மின் விநியோகம் சீராகும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரயில் மறியல்: நாகர்கோவிலில் திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 400 பேர் கைது! November 24, 2018

Image

கன்னியாகுமரி விரைவு ரயிலை சரியான நேரத்தில் இயக்கக்கோரி, நாகர்கோவிலில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 400 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆஸ்டின், சுரேஷ் ராஜன், பிரின்ஸ், ராஜேஸ்குமார் மற்றும் விஜயதரணி உள்பட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, கேரள மாநிலம் கொச்சுவெளிக்கு கன்னியாகுமரி விரைவு ரயிலை இயக்கக் கூடாது என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ரயிலை மறித்து போராடியதால் அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

பெங்களூரூ வழியாக சென்னை - மைசூரு இடையே புல்லட் ரயில் சேவை? November 24, 2018

சென்னை - மைசூரு நகரங்களுக்கு இடையிலான புல்லட் ரயில் சேவை திட்டம் குறித்த சாத்தியக்கூறு அறிக்கை ஜெர்மன் அரசு சார்பில் இந்திய ரயில்வேயிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரக்கோனம், பெங்களூரு வழியாக சென்னை முதல் மைசூரு வரையிலான 435 கிமீ நீள தூரத்திற்கான புல்லட் ரயில் சேவை வழங்கும் வகையிலான திட்டத்திற்கான சாத்தியக் கூறு அறிக்கையை இந்திய ரயில்வேயின் தலைவர் அஷ்வானி லோஹானியிடம் ஜெர்மன் நாட்டிற்கான தூதர் மார்டின் நே நேரில் அளித்துள்ளார். இந்த சாத்தியக்கூறு சோதனை ஜெர்மன் அரசின் சார்பில் நடத்தப்பட்டது.

இதன் மூலம் 7 மணிநேரமாக உள்ள சென்னை - மைசூரு பயண தூரம் பாதியாக குறைக்கப்படும். மணிக்கு 320 கிமீ வேகத்தில் இந்த பாதையில் புல்லட் ரயில்கள் இயக்கப்படும் எனவும், சென்னையிலிருந்து மைசூருக்கு வெறும் 2 மணி நேரம், 25 நிமிடங்களில் சென்று விடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்பாதையில் 85% உயர்த்தப்பட்ட வழியாகவும், 11% சுரங்கப்பாதையின் வழியாகவும் இருக்கும் என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய ரயில்வேயின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த அறிக்கையானது ஏற்கப்படும்பட்சத்தில் வரும் 2030ஆம் ஆண்டு முதல் சென்னை - மைசூரு இடையே புல்லட் ரயில்சேவை தொடங்கப்படும் என தெரிகிறது.

தற்போது அமைந்திருக்கும் வழித்தடத்திலேயே இத்திட்டத்தினை செயல்படுத்தலாம் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதற்கான நடைமுறை சாத்தியக்கூறுகள் அரிதாகவுள்ளதாக கூறி அதனை இந்திய ரயில்வே நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டது.

ஒரு லட்சம் கோடி மதிப்பீட்டிலான இத்திட்டம் சென்னை, பெங்களூரு, மைசூரு இடையே பயணம் செய்யும் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பாதையில் தற்போது நடைமுறையில் உள்ள விமானக் கட்டணத்திற்கு நிகராகவே இந்த வழித்தடத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனவும் அஷ்வானி லோஹானி தெரிவித்தார்.

வெள்ளி, 23 நவம்பர், 2018

குழந்தைகள் கடத்தலை தடுப்பது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! November 23, 2018

Image

காப்பகங்களில் சேர்க்கப்படும் குழந்தைகளின் மரபணு மாதிரிகளை சேகரித்து வைக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று வரும் குழந்தைகள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு, விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் மொத்தம் 1,274 குழந்தை காப்பகங்கள் இருப்பதாகவும், அதில் 3 காப்பகங்கள் பதிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

அத்தகைய பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகங்களில் அரசு ஏன் திடீர் ஆய்வு மேற்கொள்ள கூடாது என நீதிபதிகள் அப்போது கேள்வி எழுப்பினர். மேலும், நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்காமல், இந்த விவகாரத்தில் துடிப்புடன் செயல்பட வேண்டும்  என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அதோடு, குழந்தைகள் கடத்தல் பின்னணியில் ரவுடி கும்பல் ஏதாவது உள்ளதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குழந்தை கடத்தலை தடுக்க, காப்பகத்தில் சேர்க்கப்படும் குழந்தைகளின் மரபணு மாதிரிகளை சேகரித்து வைக்க அரசுக்கு உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை டிசம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

அந்தமான் சாண்டினல் தீவிற்கு சென்ற அமெரிக்க இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம்: திடுக்கிடும் தகவல்கள்! November 23, 2018

அந்தமானில் உள்ள சாண்டினல் தீவுக்கு சென்ற அமெரிக்க இளைஞர் மீது அம்பு எய்தி கொலை செய்த பழங்குடியினர் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கருத்த தேகம், கைகளில் வில் அம்பு, கொடூர முகத்துடன் இருப்பவர்கள் சாண்டினல் பழங்குடியினர். கற்கால நாகரீகத்தின் எச்சமாக இன்றும் அந்தமானின் வடக்கே உள்ள சாண்டினல் தீவில், இவர்கள் வசித்து வருகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக வெளியுலக தொடர்பே இல்லாமல் இருக்கும் இவர்கள், உலகின் அதிபயங்கர பழங்குடினர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். காரணம், செண்டினல் தீவில் காலடி எடுத்து வைக்கும் எவரின் உயிரையும், அடுத்த நிமிடமே, இவர்கள் காற்றில் பறக்க விட்டுவிடுவார்கள். தற்போது, இவர்களின் அம்புக்கு பலியாகி இருப்பது, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலென் காவ் என்ற 27 வயதே ஆன இளைஞர். 

கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக சென்றபோது, அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, அமெரிக்கா கொடுத்து வரும் நெருக்கடி காரணமாக, ஜான் ஆலென் காவின் உடலை மீட்க இந்திய கடற்படை தீவிரமாக போராடி வருகிறது. எனினும், சாண்டினல் தீவை சுற்றி வர முடிகிறதே தவிர, இந்திய கடற்படையால் அவர்களை நெருங்கக்கூட முடியவில்லை.  

யார் இந்த சாண்டினல் பழங்குடியினர்... ஏன் இவர்கள் இவ்வளவு உக்கிரமாக இருக்கிறார்கள்... சாண்டினல் பழங்குடியின மக்களிடம்தான் உலகின் ஒட்டுமொத்த மனித வரலாறும் புதைந்து கிடக்கிறது. ஆனால், அவர்களை பற்றி பல நாடுகளை சேர்ந்தவர்கள் ஆய்வு செய்தும் இதுவரை ஒரு துரும்பைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை எப்படி அணுகினாலும் பதிலாக வருவது வில்லும் அம்பும் மட்டுமே.

கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியின்போது இந்த தீவு அழிந்துவிடும் என நினைத்தவர்களுக்கு எதிர்மறையான பதில்களே கிடைத்தது. ஆழிப்பேரலையில் பழங்குடியினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. சுனாமியை முன் கூட்டியே உணர்ந்து, உயரமான இடங்களுக்கு சென்று அவர்கள் தப்பித்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த தீவை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்துள்ள இந்திய அரசு, கடற்கரையைச் சுற்றி 3 மைல் தொலைவுவரை சுற்றுலாப் பயணிகள் நுழைய தடை விதித்திள்ளது. கடந்த 1997 ஆம் ஆண்டு, இந்த தீவுக்கு அருகில் சென்ற சிலர், பழங்குடியினரிடம் தேங்காயை தூக்கிப் போட்டனர். இதுவே,உலகம் தோன்றியதிலிருந்து, வெளியுலக மனிதர்களுக்கும் அவர்களுக்குமான ஒரே தொடர்பு. இப்படி, அபாயகரமான பகுதியாக காணப்படும் இந்த தீவில் தான், ஜான் ஆலென் காவின் தனது உயிரை இழந்துள்ளார். சாண்டினல் தீவைப் பற்றி உலகமே பல சர்ச்சைக்குரிய கதைகளைக் கூறி வருகிறது. ஆனால், அந்த பழங்குடியின் மக்களோ உலகிற்கு சொல்வது ஒன்றே ஒன்று தான் “உத்தரவின்றி உள்ளே வராதீர்கள்”.
Image

ஹார்வார்ட் பல்கலை-யின் மாணவ அமைப்பு தலைவரானார் இந்திய வம்சாவளிப் பெண்! November 23, 2018

Image

புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் மாணவ அமைப்பு தலைவராக இந்திய வம்சாவளி பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தற்பொழுது அமெரிக்காவில் வசித்துவருபவர் பழனியப்பன். இவர், கடந்த 1992ம் ஆண்டு தன் குடும்பத்துடன் சென்னையிலிருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்துள்ளார். இவருடைய மகள் ஷ்ருதி பழனியப்பன். 20 வயதே ஆன இவர், புகழ்பெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் மாணவ அமைப்பு தலைவராக இந்தாண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அனைவருக்கும் கல்வி இலவசமாக வழங்கப்படவேண்டும் என்பதை முக்கிய கொள்கையாக கொண்டுள்ள ஷ்ருதி, 41.5% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். 'make Harward home' என்ற முழக்கத்தை முக்கியமானதாக வைத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அமெரிக்க ஜனநாயக கட்சியின் மிக இளம்வயது பிரதிநிதியாக ஷ்ருதி பழனியப்பன் இருந்தார். இவர் 2016ம் ஆண்டு அமெரிக்க ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் முக்கியப்பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த யதீஷ் சந்திரா? November 23, 2018

கேரளாவில் சபரிமலைக்கு தொண்டர்களுடன் செல்வதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுத்ததுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்ட ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திராவின் நடவடிக்கை சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

இந்த வீடியோவிற்கு பிறகு சமூகவலைதளங்களில் ஹீரோ அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார் கேரள ஐபிஎஸ் அதிகாரியான யதீஷ் சந்திரா.. நேற்றைய தினம் முதல் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நபராகவும் யதீஷ் சந்திரா உள்ளார். இவரது கம்பீரமான மற்றும் கறாரான போக்கிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் மட்டுமல்லாமல் இது போன்ற பல அதிரடி செயல்பாடுகளுக்கு பெயர் போனவராக இருந்து வந்துள்ளார் யதீஷ் சந்திரா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரான இவர், கடந்த 2015ஆம் ஆண்டு கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார். அந்த சமயத்தில் கேரளாவின் ஆளும் கட்சியாக காங்கிரசும், எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சியும் இருந்தன.  அப்போது ஆளும் அரசை கண்டித்து கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டம் ஒன்றில் தடியடி நடத்தி யதீஷ் சந்திரா பெரும் சர்ச்சைக்கு உள்ளானார். கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனால் பைத்தியக்காரன் என்ற வசவுக்கும் ஆளானார்.

அப்போது அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர் பாஜகவினர்... இன்று சபரிமலை விவகாரத்தில் யதீஷ் சந்திராவை தீட்டி தீர்க்கும் அதே பாஜகவினர். இந்நிலையில்தான் கடந்தாண்டு எர்ணாகுளத்தில் எஸ்பியாக பொறுப்பேற்றார் யதீஷ் சந்திரா.

அப்போது, எல்பிஜி குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள உயர் நீதிமன்றம் முன்பு ஒரு போராட்டடம் வெடிக்கிறது. அந்த போராட்டத்தை மக்கள் முன்னெடுத்திருந்தனர்.  அப்போதும் யதீஷ் சந்திரா தடியடி நடவடிக்கையை மேற்கொண்டார்.. அந்த சம்பவம் வழக்காக தொடரப்பட்டு இன்றும் மனித உரிமைகள் ஆணையத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியால், ஃபிட்னஸ் சேலஞ்சுக்கு அழைப்பு விடுக்கபட்டவர் இந்த யதீஷ் சந்திரா என்பதும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில்தான் சபரிமலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உடனான வாக்குவாத சம்பவம் நடைபெற்றது. அப்போது, ஐபிஸ் அதிகாரி யதீஷ் சந்திரா பொறுமையாக தனது தரப்பு நியாயத்தை தெரிவித்த விதத்திற்கு நெட்டிசன்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

http://ns7.tv/ta/tamil-news/india/23/11/2018/who-yatish-chandra

வியாழன், 22 நவம்பர், 2018

எமது பகுதி கஜா புயல் பாதிப்பின் தொகுப்பு - 16 /11/2018 -Part 7



photography : Muhamed Buhary









hammed Buhary