கஜா புயலை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் மழையின் அளவை பொறுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கஜா புயலை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், வேளாண்த்துறை அமைச்சர் கமலக்கண்ணன், வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான், அனைத்து துறை செயலர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, காஜா புயலை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகள் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், கஜா புயலால் காரைக்காலில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், புயலை எதிர்கொள்வது தொடர்பாக காரைக்காலில் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், மழை பாதிப்பிற்கு ஏற்ப பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படுமென முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்