வியாழன், 29 நவம்பர், 2018

மெரினா கடற்கரையில் கடந்த ஒரு வாரமாக ஏற்பட்ட நுரைக்கு என்ன காரணம்? November 29, 2018

பருவமழை துவங்கும் போது சென்னையில் கடற்கரை பகுதியில் தொடர்ந்து நுரை ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. கடந்த வியாழக்கிழமை மெரினா முதல் பெசண்ட் நகர் வரை உள்ள கரைப்பகுதி முழுவதும் நுரை காணப்பட்டது, இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்ன?
பார்ப்பதற்கு மட்டும் அல்ல நின்று சுவாசிப்பதற்கு கூட முடியாத நிலையில் இருக்கும் இந்த இடம் தான் கூவம் நதியின் முகத்துவாரம்.



இதே போல் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழில் மிகுந்து காட்சி அளித்த அடையாறு போன்ற நதியின் நிலைமையும் இதே போல் தான், பொதுவாக வடகிழக்கு பருவமழை துவங்கும் போது பெய்யும் முதல் கனமழையின் போது முகத்துவார பகுதிகளில் தேங்கி உள்ள குப்பைகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய ரசாயன கழிவுகள் என ஒட்டுமொத்தமாக கடலில் கலக்கின்றன.
கடந்த வாரம் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 15 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்தது, இதனையடுத்து முகத்துவார பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக வெளியேறிய சில மணி நேரங்களில் கடலில் இருந்து அதிகபடியான நுரை வெளிப்பட்டது.
மெரினா முதல் பெசண்ட் நகர் வரை நுரை காணப்பட்ட நிலையில்,தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக ஆய்வு மேற்கொண்டது. இதில், வீடுகளில் பயன்படுத்தும் டிடர்ஜெண்ட், சில ஆலைகளின் ரசாயன கழிவுகள் அதிகபடியாக வெளியேறிய காரணத்தால் நுரை ஏற்பட்டு உள்ளதாகவும், இதனால் கடல் மாசு ஏற்பட்டுள்ளதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
உலகில் 60% ஆக்சிஜனை பவளப்பாறைகள் உற்பத்தி செய்வதாகவும்,அத்தகைய பாறைகள் மன்னார் வளைகுடா பகுதிகளில் அதிகம் இருப்பதாக கூறும் இயற்கை ஆர்வலர் வெற்றிச்செல்வன், கடல் மாசால் ஆக்ஸிஜன் உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் கூறுகிறார்.
மேலை நாடுகளில் கழிவுநீரை குடிநீராக மாற்றும் திட்டம் இருப்பதாக கூறும் சூழலியல் ஆய்வாளர் நித்யானந்த் ஜெயராமன், முகத்துவார பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பை, ரசாயனம் போன்றவை மறுசுழற்சி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.
ஏற்கனவே பல இயற்கை மாற்றங்களை எதிர்நோக்கி வரும் நாம், தலைமுறை சூழல் பாதுகாப்பு குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே நிதர்சனம்.