கஜா புயலுக்காக தமிழக அரசு கோரிய நிதியை போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என்று திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை ஏற்கெனவே மூன்று முறை புயல் தாக்கியபோது மத்திய அரசு போதிய நிவாரணம் வழங்கவில்லை என்று குற்றம்சாட்டினார். கடந்த முறை அதிமுக அரசு ஒரு லட்சம் கோடி கேட்டதற்கு மத்திய அரசு இரண்டாயிரம் கோடி தான் வழங்கியது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிவாரணப் பணிகளில் தமிழக அரசு விரைந்து செயல்படவில்லை என்று கூறிய மு.க.ஸ்டாலின், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஐந்து நாட்கள் கழித்து முதலமைச்சர் ஆய்வு செய்தது வேடிக்கையானது என்றும் விமர்சித்தார். கஜா புயலை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என்றும், அரசியல் பாகுபாடின்றி நிவாரண பணிகளின் ஈடுபட திமுக தயாராக உள்ளது என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் மீனவர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரை சந்தித்தப் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்தித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் அவர் கூறினார். முன்னதாக, திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இருந்து 400 டன் அரிசி, கோதுமை, ரவை, மருந்து பொருட்கள் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.