கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தருமபுரியில் நாட்டுபுற கலைஞர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து நிதி திரட்டினர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள நாட்டுபுற கலைஞர்கள் மற்றும் பம்பை இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து இப்பணியில் ஈடுபட்டனர். தருமபுரி கோட்டை காமாட்சியம்மன் கோயிலிருந்து ஊர்வலமாக பம்பை அடித்துக்கொண்டும், நடனம் ஆடியும் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து நிதி திரட்டினர்.
இதேபோல் தருமபுரி மாவட்டத்தின் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, அரூர் போன்ற பகுதிகளிலும் நாடக கலைஞர்கள் நிதி திரட்டி வருகின்றனர். இவ்வாறு திரட்டப்படும் நிதி மாவட்ட ஆட்சியரிடம் நாளை வழங்க உள்ளதாக கலைஞர்கள் தெரிவித்தனர்.
மேலும், தமிழ்நாடு நாட்டுப்புற இசை பெருமன்றத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள், மதுரையின் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டி வருகின்றனர். அதன்படி, மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் வளாகத்தில் கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் ஆட்டம், குதிரையட்டம் , நையாண்டி, தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியை இன்று நிகழ்த்தினார்கள்.
நாட்டுப்புற கலைஞர்களின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பெரும் வரவேற்பை அளித்து உதவி செய்தனர்.