தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட காய்ச்சல்கள் வேகமாக பரவி வருவதால், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகளை ஏற்படுத்த உத்தரவு பிறப்பிக்க கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சசிதரன் - ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உயிரிழந்தோர் எண்ணிக்கை, காய்ச்சலை தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து வரும் 20ம் தேதி சுகாதாரத்துறை முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
source: http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/12/11/2018/dengue-and-swine-flu-echo-chennai-high-court-madurai-branch-action