புதன், 28 நவம்பர், 2018

இன்ஜினியரிங் படிப்பை முடிக்காமல் திணறிவந்த மாணவனை வீட்டிற்கு அனுப்பிய நீதிமன்றம்! November 27, 2018

Image

குருஷேத்ரா பல்கலைக் கழகத்தில், கடந்த 9 வருடங்களாக பி.டெக் பட்டத்தை முடிக்க முடியாமல் திணறிய மாணவன் அளித்த கருணை மனுவை ஹரியானா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

17 பாடங்களில் இன்னும் தேர்ச்சியடையாமலிருக்கும் அந்த மாணவன், 2009ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்துள்ளார். இத்தனை ஆண்டுகளாகியும் தேர்ச்சியடைய முடியாமல் திணறிவந்துள்ள அவர் மீதமுள்ள பாடங்களில் தேர்ச்சியடைய மேலும் 4 ஆண்டு கால அவகாசம் கேட்டு ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த  நீதிபதியோ, அரசின் வளங்களை சீரழிக்கும் இது போன்ற ஆட்களிடம் கருணை காட்ட முடியாது, மேலும் இந்த மாதிரியான விஷயங்களை இனிமேலும் ஊக்குவிக்க முடியாது என கூறியுள்ளார். இதையடுத்து அந்த மாணவன் இன்னும் ஒரே ஒருமுறை பரீட்சை எழுத வாய்ப்பளிக்குமாறு கெஞ்சியுள்ளார். 

ஆனால் நீதிமன்றமோ, "செலுத்திய கட்டணத்தை காட்டிலும் கல்லூரி நிர்வாகம் உங்களுக்கு நிறைய பணி செய்துவிட்டது. இத்தனை ஆண்டுகளாக தேர்ச்சியடைய முடியாமல் திணறிவரும் உங்களால் கடைசி ஒரு வாய்ப்பில் எப்படி தேர்ச்சியடைய முடியும்? வேறு ஏதாவது படித்துக் கொள்ளுங்கள், இன்ஜினியரிங் உங்களுக்கு வேண்டாம்" எனக்கூறி அனுப்பியுள்ளது.

இந்த செய்தி தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.