வியாழன், 8 நவம்பர், 2018

மத்தியில் பதவி ஏற்றது முதல் இடைத்தேர்தல்களில் பாஜக பெற்ற வெற்றிகள் எவ்வளவு? November 7, 2018

2014ம் ஆண்டு பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் நடந்த நாடாளுமன்ற இடைதேர்தல்களில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை, மொத்தம் நடந்த இடைதேர்தல்கள் குறித்தும், அதில் பாஜக பெற்ற வெற்றிகள் குறித்தும் தற்போது காணலாம்..

2014ம் ஆண்டிற்கு பின்னர் நடந்த 30 மக்களவை இடைதேர்தல்களில் 6 தொகுதிகளில் மட்டுமே பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதே போன்று காங்கிரஸ் கட்சியும் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் 14 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

இடைதேர்தல்களில் கைவசம் இருந்த தொகுதிகளில் 9 தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. பாஜக இழந்துள்ள 9 தொகுதிகளில் 7 தொகுதிகள் பாஜக ஆளும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்தவை.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் 3 தொகுதிகளையும் , ராஜஸ்தானில் 2 தொகுதிகளையும் மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒரு தொகுதியையும் பாரதிய ஜனதா கட்சி இழந்துள்ளது. பாஜக இழந்த 9 தொகுதிகளில் 5 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது.

பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட பெல்லாரி, கோரக்பூர், புல்பூர் உள்ளிட்ட தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சி இழந்துள்ளது. கோரக்பூர் தொகுதி உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யனாத் 2014 தேர்தலில் வெற்றி பெற்று பின்னர் ராஜினாமா செய்த தொகுதி.

2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் நடந்த 17 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் பாஜக 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி மக்களவையில் பாரதிய ஜனதா கட்சியின் பலம் 271 ஆக குறைந்துள்ளது. மக்களவையில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 11 தொகுதிகள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

source:
http://ns7.tv/ta/tamil-news/india/7/11/2018/how-many-elections-did-bjp-won-after-2014