சனி, 3 நவம்பர், 2018

தமிழ் மக்களிடையே கடும் விமர்சினத்திற்குள்ளான ​‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ : பிழையை திருத்த முடிவு! November 3, 2018

Image

சர்தார் வல்லபாய் படேலின் (STATUE OF UNITY) சிலை திறப்பு விழாவில் வைக்கப்பட்டிருந்த பிழையான தமிழ் பெயர்ப் பலகை சரி செய்யப்பட்டு மீண்டும் அமைக்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது. 

குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரையில் 3000 கோடி ரூபாய் செலவில், சர்தார் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உயர சிலையை கடந்த 31ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதையடுத்து நாடு முழுக்க ஒருபுறம் பாராட்டுக்கள் எழுந்தாலும் மறுபுறம் கடும் எதிர்ப்பு எழுந்தது. நாட்டில் ஏழ்மையில் மக்கள் பலர் வருந்தும் வேளையில், விவசாயிகள் வாழ்வுக்கே போராடி வரும் நிலையில் வல்லபாய் படேல் சிலைக்கு 3000 கோடி ரூபாய் அவசியம் தானா என ஒருபுறம் கேள்வி எழுந்தது.

இந்த விமர்சனம் ஒருபக்கம் பரவி வந்த நிலையில், சிலை திறப்பு விழா வளாகத்தில், STATUE OF UNITY என்பது, ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தமிழ், அரபு என மொத்தம் 10 மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. சில மொழிகளில் சரியாக மொழிபெயர்க்கப்பட்ட இந்த வாசகம் தமிழில் ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என பிழையுடன் எழுதப்பட்டிருந்தது. தமிழ் ஆர்வலர்களிடையே இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இதையடுத்து, கூகுள் ட்ரென்ஸ்லேட்டரில் கொடுத்தாலே STATUE OF UNITY என்பதனை 'ஐக்கியத்தின் நிலை' என ஓரளவிற்கு நன்றாக மொழிபெயர்த்து தருகிறது. உலகிலேயே மிகப்பெரிய இந்தியாவின் ஒற்றுமையை குறிப்பதாக கூறப்படும் ஒரு சிலையின் பெயரை தமிழ் மொழியில், அதுவும் தமிழை தாய் மொழியாக் கொண்டவர்களுக்கே புரியாத வகையில் ​‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள் என சமூகவலைத்தளங்களில் தமிழ் மக்கள் பலரும் கடுமையாக விமர்சிக்கத் துவங்கினர்.

பின்னர் ஒரு சிலர் அப்படி ஒரு பலகையே அங்கு இல்லை என அந்த விஷயத்தை திசை திருப்ப முயன்றனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூட 'பொய்யர்கள் கண்டிக்கிறோம்' என்று குறிப்பிட்டு அங்கு அப்படி ஒரு பலகையே இல்லை என்பதை குறிக்கும் பதிவொன்றை நவம்பர் 2ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். 
 

ஆனால் நவம்பர் 1ம் தேதியே பிபிசி செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் அந்த பலகை அங்கு உள்ளது, நான்தான் புகைப்படம் எடுத்தேன் என்று வெளிப்படையாக அறிவித்து புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த அதில் தமிழ் வாசகம் மேல் அதனை மறைக்கும் விதமாக அந்த பலகையில் ஏதோ ஒட்டப்பட்டிருந்தது. 

மேலும், தமிழைப் போலவே அரபு மொழியிலும் சிலையின் பெயர் தவறாகவே மொழி பெயர்த்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது சிலையின் பெயர் மொழி பெயர்க்கப்படவில்லை, வரி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

இதனை மேலும் உறுதி செய்யும் விதமாக,  தமிழ் வாசகம் தவறானது என சுட்டிக்காட்டப்பட்டதால், உடனடியாக அதனை அகற்ற உத்தரவிடப்பட்டதாகவும், பிழை சரி செய்யப்பட்டு விரைவில் மீண்டும் மாற்றி அமைக்கப்படும் என்றும் குஜராத் மாநில தகவல் மற்றும் செய்தி ஒளிபரப்புத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.