செவ்வாய், 27 நவம்பர், 2018

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் சோகம் சொல்லில் அடங்காதது : மத்தியக்குழுவின் தலைவர் பேட்டி! November 26, 2018

Image

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் சோகம் சொல்லில் அடங்காதது என்று, கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வரும் மத்தியக்குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார். 

உள்துறை அமைச்சக இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் மத்தியக் குழு கடந்த இரு தினங்களாக கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்று நாகை மாவட்டம் விழுந்தமாவடி,  வேதாரண்யம், புஸ்பவனம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். புயலால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் மத்திய குழுவினரின் காலில் விழுந்து கதறினர். 

புஸ்பவனம் மீனவ கிராமத்தில் சேற்றில் மூழ்கிய வீடுகளை கண்டு மத்திய குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் சோகம் சொல்லில் அடங்காதது என்று கூறினார். ஒரு சில இடங்களை பார்க்கும் போதே பாதிப்பு தெரிவதாகவும், அதனால் மற்ற இடங்களை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார். தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

இதனைத்தொடர்ந்து புயல் பாதித்த காரைக்காலுக்கு சென்ற மத்திய குழு, பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். சேதங்களை மதிப்பீடு செய்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தும் குறைகளை கேட்டறிந்தனர். பின்னர், ஆய்வுப்பணியை முடித்தபின் அக்குழுவினர் புதுச்சேரி சென்றடைந்தனர்.  நாளை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பேச உள்ளனர்.