ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் இரவில் மட்டுமே நைட்டி அணிய வேண்டுமென கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.
மேற்கு கோதாவரி மாவட்டம் தேக்கலப்பள்ளி கிராமத்தில் மது அருந்த தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, மது அருந்தினால் கிராம பஞ்சாயத்தால் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும், மது அருந்துவோர் குறித்து தகவல் கூறினால் ஆயிரம் ரூபாய் சன்மானமும் வழங்கப்படுகிறது.
இதே போல், பெண்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நைட்டி அணிந்து வீதியில் நடமாட கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ளது. உத்தரவை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
இது குறித்து மகளிர் அமைப்பினர் அளித்த புகாரின் பேரில், போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டனர். எனினும், பெண்கள் யாரும் புகார் அளிக்க முன்வராததால் போலீசார் திரும்பிச் சென்றனர்.