சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவைக் கூடுதலாகக் கவனித்து வந்த ரயில்வே போலீஸ் ஐஜி பொன்.மாணிக்கவேலின் பதவிக் காலம் இன்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.
பொன்மாணிக்கவேல்.... மிடுக்கான நடை... கம்பீரமாக தோற்றம்... யாருக்கும் அஞ்சாத தீரம்... இவரின் தோற்றத்தைப் பார்க்கும் யாரையும் வசீகரிக்கும் நிஜக் காவல் அதிகாரி... பெரும் முதலாளிகளின் அந்தப்புரங்களில் புதைந்துக் கிடந்த கோவில் சிலைகளில், தோண்டி எடுத்து தமிழகத்திற்கு இவர் காட்டிய போது தான் சிலைகளின் மதிப்பையே தமிழகம் உணர்ந்து கொண்டது. நம்மை விட சோழர்கால சிலைகளைக் கொண்டாடும் வெளிநாட்டினர் பல ஆண்டுகளுக்கு முன்பே அவற்றை தங்கள் வீட்டின் அடுக்கறைகளில் பூட்டி அலங்கார பொருட்களாக மாற்றினர். தமிழகத்தின் வேர்களில் இருந்த அந்த சிலைகள் எங்கெங்கு சென்றன என்பதை இவர் அக்கு வேர் ஆணி வேராக பிரித்துக் காட்டிய போது, நாம் மலைத்துப் பார்த்தோம்.
1996 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி. இன்றைய செங்கல்பட்டு கிழக்கு காவல் உட்கோட்ட டிஎஸ்பியாகத்தான் சென்னைக்குள் முதலில் நுழைந்தார். பொன். மாணிக்கவேலின் சர் வீஸ் பக்கங்களில், பல அதிகாரங்களின் கீறல்களைப் பார்க்க முடியும்.... அரசியல்வாதிகளால், பந்தாடப்பட்டு, ஊர் ஊராக மாற்றப்பட்டதையும் உணர முடியும். இருப்பினும், சிலைகள் தான் பொன் மாணிக்கவேலை தமிழகத்திற்கு அடையாளம் காட்டின.
தமிழகக் கோயில்களில் திருடப்பட்ட 155 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்பு, 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கடத்தப்படுவது முறியடிப்பு என்று நிறைவாகவே இருந்திருக்கிறது, அவரது காவல் பணி.
15 ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் இருந்து ஒரு கோடி 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1,040 ஆண்டுகள் பழமையானது சிலைகள் திருடப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டது. இதனை தெரிந்து கொண்ட பொன்.மாணிக்கவேல் அதனை மீட்டெடுத்தார். இதன் தொடர்ச்சியாக, சிலை கடத்தல் தொடர்பாக இவர் அடுக்கிய பட்டியல் தமிழகத்தையே உலுக்கியது. அத்துடன், ராஜராஜ சோழன் சிலை, இளவரசி லோகமாதேவி சிலையை குஜராத்தின் அருங்காட்சியகத்திலிருந்து மீட்டு வந்து தமிழகத்தின் கிரீடத்தில் சூட்டினார்.
பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன், மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடுகளில் அதிரடியாக நுழைந்து சிலைகளை மீட்டெடுத்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் மோசடி நடந்தது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதாவை கைது செய்து ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்தார். இதனால், தமிழக அரசியலில், சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
பொன்.மாணிக்கவேல், எடுத்த அடுத்தடுத்த நடவடிக்கையால், கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 27 புராதனச் சிற்பங்கள், சிலைகள், விக்ரகங்கள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. சிலை கடத்தல் விவகாரத்தில், ஒரு பிரிவினருக்கு ஆதரவாக பொன்.மாணிக்கவேல் செயல்பட்டதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு உண்டு.
பொன் மாணிக்கவேலின் நேர்மையால், பிரபுதேவாவை நாயகனாக கொண்டு திரைப்படம் ஒன்றும் தயாராகி வருகிறது. சிலைக்கடத்தல் மர்மங்கள் முழுதாக வெளிச்சத்திற்கு வர காலங்கள் பல ஆகும் ஆனால், இந்த விஷயத்தில், பொன்.மாணிக்கவேல் என்கிற பெயர் எப்போதும் உச்சரிக்கப்படும்.