புதன், 7 நவம்பர், 2018

சபாநாயகர் பிரதமராக பதவியேற்க மறுத்ததாலேயே ராஜபக்சேவை பிரதமராக்கினேன் - அதிபர் சிறிசேனா November 6, 2018

Image

இலங்கை பிரதமராக சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை நியமிக்கவே தான் விரும்பியதாகவும் ஆனால் அவர் மறுத்ததாலேயே ராஜபக்சேவை பிரதமராக்கியதாகவும் இலங்கை அதிபர் மைத்ரிபால ஸ்ரீசேனா கூறியுள்ளார். 

இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக இலங்கை அதிபர் சிறிசேனா நியமித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் புதிய அரசுக்கு மக்களிடையே ஆதரவை பெறும்விதமாக அதிபர் சிறிசேனாவும், ராஜபக்சேவும் பங்கேற்ற பேரணி கொழும்புவில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் நியமன விவகாரத்தில் தனது முடிவை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்தார். ரணில் விக்ரமசிங்கே இந்தியாவுடன் தனக்கு இருந்த நட்புறவை பிரிக்க முயன்றதாகக் கூறிய அவர், வெளிநாட்டு கட்டளைகளை நிறைவேற்றும் வகையில் ரணில்  செயல்பட்டதாகக் கூறினார்.

மக்களின் தேவைகளை அங்கீகரிக்காத இலங்கை தேசத்தின் பிரதமராக இருக்க தகுதியில்லாத ஒருவரையே பதவியிலிருந்து தாம் நீக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முதலில் சபாநாயகர் கரு.ஜெயசூர்யாவையோ அல்லது துணை பிரதமர் சஜித் பிரேமதாசாவையோ பிரதமராக நியமிக்க முடிவெடுத்ததாகவும் ஆனால் அவர்கள் விக்ரமசிங்கேவிற்கு எதிராக களம் இறங்க தயங்கியதாலேயே ராஜபக்சேவை பிரதமராக நியமித்ததாகவும் சிறிசேனா கூறினார்.

பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 113 எம்.பிக்களின் ஆதரவு ராஜபக்சேவிற்கு இருப்பதாகவும் சிறிசேனா கூறினார்.