ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்தினால், பிரதமர் மோடி தப்பிக்கவே முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரபேல் போர் விமானங்களை நிர்வகிக்கும் பொறுப்பு அரசுக்கு சொந்தமான ஹெச்.ஏ.எல். நிறுவனத்திடம் இருந்து அம்பானிக்கு சொந்தமான தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது ஏன் என்பது குறித்து, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் அளித்த விளக்கத்தை சுட்டிக் காட்டினார். வெறும் 8 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அம்பானியின் நிறுவனத்துக்கு, டசால்ட் நிறுவனம் 284 கோடி ரூபாய் வழங்கியதாக கூறிய ராகுல்காந்தி, அந்த பணத்தை வைத்து தான் பின்னர் அம்பானியின் நிறுவனத்துக்கு நிலம் வாங்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
இந்த மோசடி குறித்த ஆதாரங்களை சேகரிக்க தொடங்கியதாலேயே, சி.பி.ஐ. இயக்குனர் பதவிநீக்கம் செய்யப்பட்டதாகவும் ராகுல்காந்தி கூறினார். இதுகுறித்து விசாரணை நடத்தினால், மோடியால் தப்பமுடியாது என்றும், அரசியலில் மீண்டும் தலைதூக்க முடியாது என்றும் ராகுல்காந்தி விமர்சித்தார்.