சனி, 24 நவம்பர், 2018

மணப்பாறையில் ஒன்பதாவது நாளாக மின் இணைப்பு இல்லாததால் பொதுமக்கள் சாலைமறியல்! November 24, 2018

Image

மணப்பாறையில் ஒன்பதாவது நாளாக மின் இணைப்பு தரவில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர்.

மணப்பாறையில் கடந்த வெள்ளிக்கிழமை கஜா புயலின் சூறைக்காற்று வீசியதில் வரலாற்றில் முதன் முறையாக புயல் காற்றின் பாதிப்பை மக்கள் உணர்ந்துள்ளனர். 3000-க்கும் மேலான மரங்களும், 1500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும், ஆயிரத்துக்கு மேலான வீடுகளின் மேற்கூரைகளும் இந்த புயலின் தாக்கத்தில் சிதிலமடைந்தது. மாவட்ட நிர்வாகத்தின் பெரும் முயற்சியால், மின் வாரிய ஊழியர்களின் கடும் உழைப்பால் நகர பகுதியில் 6-வது நாளில் 90 சதவீதம் மின் விநியோகம் தொடங்கக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து புறநகர் பகுதிகளில் அடுத்தடுத்து படிப்படியாக மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு மின்விநியோகம் அளிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

 
இருப்பினும் கிராமப் புறங்களில் மின் விநியோகம் அளிக்கும் பணி மிகவும் தொய்ந்து இருப்பதாக கூறும் தொட்டியப்பட்டி கிராம மக்கள் இன்று காலையில் பெய்து வரும் சாரல் மழையில் கொட்ட கொட்ட நனைந்தவாறு மணப்பாறை – கோவில்பட்டி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், போலீசார் சமரசம் செய்து ஓரிரு நாட்களில் மின் விநியோகம் சீராகும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.