வியாழன், 15 நவம்பர், 2018

கஜா புயல் இன்று மாலை கடலூர் அருகே கரையை கடக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் November 15, 2018

Image

கஜா புயல் இன்று மாலை கடலூர் அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல், பாம்பன் மற்றும் கடலூர் இடையே, இன்று மாலை கரையை கடக்கிறது. நள்ளிரவு நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கே 410 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 450 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. கஜா புயல் மணிக்கு, இருமடங்காக அதிகரித்து, 10 கிலோ மீட்டர் வேகத்தில், மேற்கு - தென்மேற்காக நகர்ந்து வருவதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை அதிகாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், வானிலை மையம் கூறியுள்ளது.

இதனிடையே, கஜா புயலை எதிர்கொள்ள கடலூரில் தீயணைப்புத்துறை தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்திலுள்ள 15 தீயணைப்பு நிலையங்களில் தலா ஒரு தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏழு படகுகள், 280 உயிர் காக்கும் கவசம், ஏழு மரம் அறுக்கும் இயந்திரங்கள் போன்ற பல்வேறு உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கடலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.   

கடலூர் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்டத்திற்கான பேரிடர் சிறப்பு அதிகாரி ஐஏஎஸ் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிறப்பு முகாமிற்கு அனுப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.  

இதனிடையே நாகையில் கஜா புயல் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நாகை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் கஜா புயல் கண்காணிப்பு அதிகாரியாக ஐஏஎஸ் மணிவாசகம் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் அனைத்துதுறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில் புயல் பாதிப்பிலிருந்து பொதுமக்களையும், கால்நடைகளையும் பாதுகாப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. 

பின்னர் பேசிய கண்காணிப்பு அதிகாரி மணிவாசகம், திருவாரூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 212 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு , 249 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ((மேலும் வெள்ள பாதிப்பை தடுப்பதற்காக பொதுப்பணித்துறை மூலம் 16 இடங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.