மங்கள்யான் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, முதல் முறையாக நவம்பர் 5ம் தேதி செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலம் ஒன்றினை அனுப்பியது. 9 மாத கால பயணத்துக்குப் பிறகு, 2014 செப்டம்பர் 24ம் தேதி, மங்கள்யான் செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவைப் பார்த்து பிரமித்தன. முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக செயற்கைகோள் அனுப்பிய முதல்நாடு என்கிற பெருமை இந்தியாவிற்கு கிடைத்தது.
நாசா விண்வெளி மையத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைந்த செலவில் மங்கள்யான் விண்கலம் தயாரிக்கப்பட்டிருந்தது பரவலாக பேசப்பட்டது. இது உலகநாடுகள் மத்தியில் இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியை உயர்த்திக் காட்டியது. இந்நிலையில், அமெரிக்க தேசிய விண்வெளி அமைப்பு 'மங்கள்யான்' விஞ்ஞானிகள் குழுவுக்கு அமெரிக்காவின் பெருமை மிக்க, Space Pioneer Award விருதினை வழங்கியது.
செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க விண்கலமான மாவெனைக் காட்டிலும், மங்கள்யான் திட்டத்திற்கு ஆன செலவு 10 மடங்கு குறைவு. செவ்வாய் சுற்றுவட்டப்பாதை மற்றும் நிலப்பரப்பில் இதுவரை அமெரிக்கா, ஐரொப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யா, அனைத்தும் பல முறை முயற்சி செய்து தோற்று, பின்னர் தான் வெற்றிகரமாக செவ்வாயை அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாயில் உயிர் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் பற்றிய ஆராய்ச்சியை மங்கள்யான் மேற்கொண்டு வருகிறது. மேலும் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர், கனிம வளம் உள்ளதா எனவும், மீத்தேன் வாயு உள்ளதா என்பதையும் இன்று வரை மங்கள்யான் ஆய்வு செய்து வருகிறது.
மங்கள்யான் விண்கலத்தில் முப்பரிமாண புகைப்படங்களை எடுக்க, மார்ஸ் கலர் கேமரா எனும் நவீன தொழில்நுட்ப கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமிரா, செவ்வாய் கிரகத்தின் முப்பரிமாண படங்களை ஏற்கனவே எடுத்து அனுப்பி உள்ளது. அதனை இஸ்ரோ விண்வெளி மையம் ஏற்கனவே வெளியிட்டும் உள்ளது.
இன்றுவரை தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் சிறப்பாக இயங்கி வரும் மங்கள்யான் பல சாதனைகளை புரிந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. தொடர்ந்து மேலும் சிறப்பாக இயங்கி செவ்வாய் கிரகம் மற்றும் விண்வெளி சம்மந்தனமான ஆய்வுக்குறிப்புகளில் தனக்கான ஒரு தனியிடத்தை மங்கள்யான் பிடிக்கும்.