புதன், 21 நவம்பர், 2018

​சீனாவில் முதல்முறையாக அறிமுகமாகியுள்ள செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர்! November 21, 2018

Image

அறிவியல் தொழில்நுட்பங்களில் மிகவும் உயரியதாக பார்க்கப்படும் செயற்கை நுண்ணறிவுத் துறை தற்பொழுது செய்தித்துறையிலும் நுழைந்துள்ளது. அதாவது செயற்கை நுண்ணறிவு ரோபோ, செய்தி வாசிப்பாளராக சீனாவில் பணியமர்த்தப்பட்டுள்ளது.

சின்ஹுவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு செய்திவாசிப்பாளர் செய்திகளை தெளிவாக படிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், இந்த ரோபோவால்  24 மணி நேரம் தொடர்ந்து செய்தி வாசிக்க முடியும்.

இரவு நேரங்களில் வரும் முக்கிய செய்திகளை கையாள்வதில் செய்திவாசிப்பாளர்களுக்கு சிக்கல் இருப்பதால் இதுபோன்ற செயற்கை நுண்ணறிவு செய்திவாசிப்பாளரை உருவாக்கியதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதன்மூலம் செய்திக்காக செலவிடும் தொகையும் குறைவாகிறது எனவும் தெரிவித்தனர்.

இந்த செயற்கை நுண்ணறிவு செய்திவாசிப்பாளருக்கு பலர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும், சிலர் இந்த ரோபோ வாசிக்கும் செய்திகளை சில நிமிடங்களுக்கு மேல் பார்க்கமுடியவில்லை எனவும் உச்சரிப்பில் ஏற்ற இரக்கம் இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.