திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேவகவுடா, சரத்பவார் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, திமுக பொருளாளர் துரைமுருகன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் மு.க. ஸ்டாலினும், சந்திரபாபு நாயுடுவும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சந்திரபாபு நாயுடுவின் முயற்சியை திமுக வரவேற்பதாகக் கூறினார்.