சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த மாணவர்கள் தண்ணீரில் மிதந்து செல்லும் சைக்கிளை கண்டுபிடித்துள்ளனர்.
மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியான காவேரிபுரம் பகுதியை சேர்ந்த தமிழ்குமரன், குணசேகரன் இருவரும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ பயின்று வருகின்றனர். இவர்கள் ஓய்வு நேரங்களில் மேட்டூர் அணையின் நீர்த்தேக்கத்தில், காற்றடித்த டியூப் உதவியுடன், ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு செல்வது வழக்கம். இதற்காக, தண்ணீரில் மிதந்து செல்லும் சைக்கிளை தயாரித்தனர்.
பின்னர், சைக்கிளில் மோட்டார் பொருத்தி, அதில் பெட்ரோல் ஊற்றி வேகமாக பயணிக்கும் வகையில் உருவாக்கியுள்ளனர். இந்த மிதக்கும் சைக்கிள் மூலம், வெள்ளத்தில் சிக்கியவர்களை எளிதில் மீட்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.