திங்கள், 12 நவம்பர், 2018

சர்கார் பாணியில் 2008ம் ஆண்டு நடந்த தேர்தல்; தீர்ப்பு என்ன தெரியுமா? November 11, 2018




Image

சர்கார் படம் பல சர்ச்சைகளையும் தாண்டி ஒருவருடைய ஓட்டை  கள்ள ஓட்டு போட்டுவிட்டால் தேர்தல் விதிமுறைகளில் உள்ள 49-பி பிரிவை பயன்படுத்தி தனது ஓட்டை சம்பந்தப்பட்டவர் போடலாம் என்ற செய்தியை பரவலாக இளைஞர்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறது. ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் வேட்பாளர் ஜோஷி  ஒற்றை ஓட்டில்  தோற்றுப் போக 49 பி கைகொடுத்ததா? இல்லையா ? என்பதை, தற்போது பார்க்கலாம். 

1961 ம் ஆண்டு  வகுக்கப்பட்ட தேர்தல் விதிமுறைகளின்  பிரிவு 49 பி, ஒருவருடைய ஓட்டு கள்ள ஓட்டாக போடப்பட்டிருந்தால் சம்மந்தப்பட்ட நபர்  தனது அரசு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் மூலம் நிரூபித்து  வாக்குசீட்டு முறையில் தனது வாக்கை செலுத்தலாம் .அப்படி வாக்களிக்கும் ஓட்டு  tendered votes  என கருதப்படும் .  49 பி முறைப்படி வாக்களிக்கப்படும் வாக்குகள் எண்ணப்படாது . ஒரு வேலை வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசம் மிக குறைவாக இருக்கும் போது டெண்டர் ஓட்டுகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டுமே எண்ணப்படும் . இது தான் தற்போது நடைமுறையில் உள்ள 49 பி விதிமுறை. சர்கார் படத்தில்  விஜய்க்கு ஓரிரவில்  நியாயம் கிடைப்பது போன்றெல்லாம் எதார்த்தத்தில் கிடைக்காது. அதற்கு உதராணம் தான் ராஜஸ்தான் மாநில முதல்வர் வேட்பாளர்   சி.பி . ஜோஷி வழக்கு. 

2008 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ,ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவரும் முதல்வர் வேட்பாளருமான சி.பி.ஜோஷியும், பாஜக தரப்பில் கல்யாண் சிங் சவுகானும் நாத்துவாரா தொகுதியில் போட்டியிட்டனர். ராஜஸ்தான் மாநிலத்தில் நாத்துவாரா தொகுதி தேர்தல் முடிவில் காங்கிரசின் வேட்பாளர் ஜோஷி 62,215 வாக்குகள் பெற்று  ஒற்றை ஓட்டில் தோல்வியை தழுவுகிறார் . அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கல்யாண்சிங் 62,216 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் . ஒற்றை ஓட்டில் தோல்வி என்பதை ஏற்றுக்  கொள்ள முடியாமல் சி.பி ஜோஷி மறு எண்ணிக்கை கோருகிறார். மீண்டும் எண்ணியதில் கல்யாண்சிங்கின் மனைவி கல்பனா கன்வார் இரண்டு வாக்குசாவடியில் வாக்கு பதிவு செய்திருப்பது தெரிய வருகிறது . 

டெண்டர் வாக்குகளை எண்ணவும், கள்ள ஓட்டுகள் போடப்பட்டிருப்பதை சுட்டிக் காண்பித்து நீதி கேட்டு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் 2009ம் ஆண்டு ஜனவரியில் சி.பி.ஜோஷி வழக்கு பதிவு செய்தார். 4 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் நீதிபதி தினேஷ் மகேஷ்வரி 2012 ம் ஆண்டு தீர்ப்பு வழங்கினார் . “நாத்துவாரா” தொகுதியில் பி.ஜே.பி வேட்பாளர் கல்யாண் சிங்கின் வெற்றி செல்லாது என அறிவித்து  ரத்து செய்தார். கள்ள ஓட்டுக்கள் ரத்து செய்யப்பட்டு கள்ள ஓட்டு போட்ட பாஜக வேட்பாளரின் மனைவி கல்பனா கன்வர் மற்றும் வேறு இருவர் மீது கிரிமினல் வழக்கு பதியவும் நீதிபதி உத்தரவிட்டார் . தேர்தல் முறைகேடு செய்ததற்காக பாஜக வேட்பாளர் கல்யாண் சிங் 51 ஆயிரம் ரூபாய் அபராத தொகையை காங்கிரஸ் வேட்பாளர் சி.பி.ஜோஷிக்கு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

பாஜக வேட்பாளர் கல்யாண் சிங் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் . கள்ள ஓட்டுக்கள் நீங்கலாக டெண்டர் ஓட்டுகளை மறு எண்ணிக்கை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார் சி.பி ஜோஷி. உச்சநீதிமன்ற உத்தரவில் மீண்டும் டெண்டர் ஓட்டுக்கள் எண்ணப்பட்ட போது  இருவருமே சமமான வாக்குகள் பெற்று அடுத்த சிக்கலுக்குள் புகுந்தது இந்த வழக்கு.  சம வாக்குகள் வேட்பாளர்கள் பெறும் போது குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்று ஜோஷி கோரிக்கை விடுத்தார் .  இந்த விசித்திர வழக்கில் உச்சநீதிமன்றம் 2013 ம் ஆண்டு தீர்ப்பளித்தது  . 2008 ம் ஆண்டு தேர்ந்தடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் பதவிக்காலமே முடிவடையும் நிலையில், நாத்துவாரா தொகுதியில் கல்யாண்சிங்  வெற்றி செல்லாது என அறிவிக்க முடியாது . அவர் நாத்துவாரா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என  வினோத தீர்ப்பை வழங்கி சி.பி.ஜோஷி வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் .  

49  பி யை பயன்படுத்தி நீதிமன்றத்திற்கு சென்ற காங்கிரசின் முதல்வர் வேட்பாளருக்கே 5 ஆண்டுகள் சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடையும் போது தான் தீர்ப்பு வந்தது  . அந்த தீர்ப்பிலும் கல்யாண்சிங்கின் மனைவி கள்ள ஓட்டுப் போட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டும், கள்ள ஓட்டுக்களை நீக்கிவிட்டு மறு எண்ணிக்கைக்கு தான் நீதிமன்றம் உத்தரவிட்டதே தவிர தேர்தலை ரத்து செய்யவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது.

சமீபத்தில் கர்நாடகா தேர்தலின் போது முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி , தேர்தலில் ஒரு ஓட்டு எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக  ராஜஸ்தானில் சி.பி .ஜோஷி முதல்வர் ஆக முடியாமல் போன கதையை சொன்னார். ஆனால் சி.பி ஜோஷி முதல்வராகாமல் போனதற்கு குரேஷி சொன்ன காரணம் வேறு. தேர்தல் ஆணையராக குரேஷி இருந்த போது தான்  ராஜஸ்தான் தேர்தல் சம்பவம் நடந்தேறுகிறது.   மறு வாக்கு எண்ணிக்கையின் போது சி.பி ஜோஷியின் மனைவியும் ,மகளும் வாக்களிக்கவில்லை என்பது ராஜஸ்தான் தேர்தல் பொறுப்பு அதிகாரி மூலம் குரேஷிக்கு தெரிய வருகிறது. குரேஷி போன் செய்து ஏன் அவர்கள் வாக்களிக்கவில்லை என்று ஜோஷியிடம் கேட்டாராம் . அவர்கள் கோவிலுக்கு  சென்று விட்டனர் என்று ஜோஷி பதிலளித்துள்ளார் . ஜோஷியின் மனைவி வந்து வாக்களித்திருந்தால் அன்று ராஜஸ்தான் முதல்வராகி இருப்பார் ஜோஷி என்று கூறிய குரேஷி, கடைசியாக சொன்ன வாக்கியம்தான் மிக முக்கியமானது. "அது வாக்குசாவடி தான் தேர்தல் நாளன்று ஒவ்வொரு வாக்களானுக்கும் அது கோவில்'' என்பது .
source:
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu-india/11/11/2018/2008-election-happens-sarkar-movie-india