கர்நாடக இடைத்தேர்தலில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை போல 4-1 என்ற கணக்கில் காங்கிரஸ் வெற்றிப்பெற்றுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 3 மக்களவை தொகுதிகளுக்கும், 2 சட்டமன்ற தொகுதிக்கும் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றிப்பெற்ற நிலையில், பாஜக ஒரு மக்களவை தொகுதியில் மட்டுமே வென்றுள்ளது.
கர்நாடக இடைதேர்தல் முடிவுகள் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு அதிர்ச்சியையும், காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகமும் அளித்துள்ளன. 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர், நடந்த சட்டமன்ற தேர்தல் வெற்றிகள் மோடி அலை இந்தியாவில் ஓயவில்லை என்ற பாஜகவின் கோஷத்திற்கு வலு சேர்த்தாலும், நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடை தேர்தல்கள் அந்த கோஷத்தை கேள்வி குறியாக்கி உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக இருந்த பெல்லாரி தொகுதியில் 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வீழ்ந்திருப்பது அக்கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை கேள்வி குறியாக்கி உள்ளது.
இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், இத்தேர்தலில் கூட்டணி அமைத்தது மிகுந்த பலனை தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.