சனி, 10 நவம்பர், 2018

​திருப்பூர் அருகே சங்க காலத்தை சேர்ந்த செங்கல் கட்டிடம் கண்டுபிடிப்பு! November 10, 2018

திருப்பூர் அருகே மண்ணில் புதையுண்டிருந்த சங்க காலத்தை சேர்ந்த செங்கல் கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கவுசிகா நதியின் கரையில் இந்த கட்டுமானம் அமைந்திருப்பதால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான ஒரு நகரத்தின் எஞ்சிய பகுதியாக இருக்கலாம் என வரலாற்று ஆர்வலர்கள் கருதுகின்றனர். திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் அருகே திருப்பூர் –கோவை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது குருக்கம்பாளையம் கிராமம்.இங்கு நடராசன் என்பவரது குடும்பத்துக்கு சொந்தமான மானாவாரி நிலம் உள்ளது. இதில் விவசாய பணிகளுக்காக மண்ணை தோண்டும்போது செங்கல்லால் ஆன கட்டுமானம் தென்பட்டது. 

இது குறித்து திருப்பூரில் உள்ள தொல்லியல் ஆர்வலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு தொல்லியல் ஆர்வலர்கள் ஆய்வு செய்தபோது, இதற்கு முன் கிடைத்த சங்க கால செங்கல் அளவுகளோடு அந்த கட்டுமானத்தின் செங்கல் அளவு ஒத்திருப்பது தெரியவந்தது. இது சேர மன்னர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகவோ அல்லது மதில் சுவராகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது. அங்கு விரிவான அகழாய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Image