செவ்வாய், 13 நவம்பர், 2018

தமிழகத்தை தாக்கிய முக்கிய புயல்கள் எவை தெரியுமா? November 12, 2018

Image

தென் மேற்குப் பருவமழை தொடங்கினாலே தமிழகத்தை புயல் தாக்குவது கடந்த சில ஆண்டுகளாக வழங்கமாகியுள்ளது. இந்நிலையில், கஜா புயால் அச்சுறுத்தல் விடப்பட்டுள்ள சூழலில், கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தை தாக்கிய முக்கியமான புயல் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்...

➤ தமிழகத்தை கடந்த 2005 ஆம் ஆண்டு பியார், பாஸ், பனூஸ் என மூன்று புயல்கள் இணைந்து ஒரே புயலாக வலுத்தது. கடந்த 2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் உருவான இந்த புயல், டிசம்பர் 7-ம் தேதி, மணிக்கு 101 கிலோமீட்டர் வேகத்தில் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது. 

வட தமிழகத்தின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்த இந்த புயலால் கடலூர் மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது. 

➤ பனூஸ் புயலைத் தொடர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி தமிழகத்தை அச்சுறுத்தியது நிஷா என்ற புயல். மணிக்கு சுமார் 83 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய நிஷா புயலால், தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

➤ இதே போல், தென் சீனக் கடலில் உருவான ஜல் புயலால் தமிழகம் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது.
கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி வீசிய இந்த புயல் மணிக்கு 111 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னை உள்ளிட்ட நகரங்களை சூறையாடியது. 

➤ கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி, சுமார் 165 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய தானே புயலின் கோரத்தாண்டவத்திற்கு கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகள் இரையாகின. கடலூர் மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், பலர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். 

➤ கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி, வங்கக் கடலில் நீலம் புயலாக உருமாறி மணிக்கு 83 கிலோ மீட்டர் வேகத்தில் நீலம் புயல் வீசியது. சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் கரையைக் கடந்த இந்த புயலால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களின் வசிப்பிடங்களை விட்டு வெளியேறினர். 

➤ 2016 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வீசிய கியாண்ட், நடா ஆகிய புயலால் தமிழகம் பெருமளவு இழப்பை சந்திக்கவில்லை. இருப்பினும், தொடர்ந்து வீசிய வர்தா 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி சென்னையைப் புரட்டிப் போட்டது. 

வர்தா புயலால் சென்னையில் ஏற்பட்ட சேதம் சுமார் ஆயிரம் கோடி என்று கூறப்படுகிறது. இதனால், சாலைகளில் இருந்த பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன.