வெள்ளி, 23 நவம்பர், 2018

யார் இந்த யதீஷ் சந்திரா? November 23, 2018

கேரளாவில் சபரிமலைக்கு தொண்டர்களுடன் செல்வதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுத்ததுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்ட ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திராவின் நடவடிக்கை சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

இந்த வீடியோவிற்கு பிறகு சமூகவலைதளங்களில் ஹீரோ அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார் கேரள ஐபிஎஸ் அதிகாரியான யதீஷ் சந்திரா.. நேற்றைய தினம் முதல் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நபராகவும் யதீஷ் சந்திரா உள்ளார். இவரது கம்பீரமான மற்றும் கறாரான போக்கிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் மட்டுமல்லாமல் இது போன்ற பல அதிரடி செயல்பாடுகளுக்கு பெயர் போனவராக இருந்து வந்துள்ளார் யதீஷ் சந்திரா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரான இவர், கடந்த 2015ஆம் ஆண்டு கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார். அந்த சமயத்தில் கேரளாவின் ஆளும் கட்சியாக காங்கிரசும், எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சியும் இருந்தன.  அப்போது ஆளும் அரசை கண்டித்து கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டம் ஒன்றில் தடியடி நடத்தி யதீஷ் சந்திரா பெரும் சர்ச்சைக்கு உள்ளானார். கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனால் பைத்தியக்காரன் என்ற வசவுக்கும் ஆளானார்.

அப்போது அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர் பாஜகவினர்... இன்று சபரிமலை விவகாரத்தில் யதீஷ் சந்திராவை தீட்டி தீர்க்கும் அதே பாஜகவினர். இந்நிலையில்தான் கடந்தாண்டு எர்ணாகுளத்தில் எஸ்பியாக பொறுப்பேற்றார் யதீஷ் சந்திரா.

அப்போது, எல்பிஜி குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள உயர் நீதிமன்றம் முன்பு ஒரு போராட்டடம் வெடிக்கிறது. அந்த போராட்டத்தை மக்கள் முன்னெடுத்திருந்தனர்.  அப்போதும் யதீஷ் சந்திரா தடியடி நடவடிக்கையை மேற்கொண்டார்.. அந்த சம்பவம் வழக்காக தொடரப்பட்டு இன்றும் மனித உரிமைகள் ஆணையத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியால், ஃபிட்னஸ் சேலஞ்சுக்கு அழைப்பு விடுக்கபட்டவர் இந்த யதீஷ் சந்திரா என்பதும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில்தான் சபரிமலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உடனான வாக்குவாத சம்பவம் நடைபெற்றது. அப்போது, ஐபிஸ் அதிகாரி யதீஷ் சந்திரா பொறுமையாக தனது தரப்பு நியாயத்தை தெரிவித்த விதத்திற்கு நெட்டிசன்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

http://ns7.tv/ta/tamil-news/india/23/11/2018/who-yatish-chandra