புதன், 28 நவம்பர், 2018

​மத உணர்வுகளை காயப்படுத்தியதாக செயற்பாட்டாளர் ரெஹனா ஃபாத்திமா கைது! November 27, 2018

கேரள மாநிலம் சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதியளித்து உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்த நிலையில் கடந்த அக்டோபர் 19ம் தேதியன்று மலைக்கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் ரெஹனா ஃபாத்திமா என்ற 31 வயது இளம்பெண் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த கவிதா ஆகியோர் செல்ல முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் அய்யப்ப பக்தர்களின் கடும் போராட்டத்தையடுத்து சபரிமலையில் பக்தர்களை தவிர்த்து செயற்பாட்டாளர்களுக்கு அனுமதியில்லை என்று கேரள அரசு அறிவித்ததைத்தொடர்ந்து ரெஹனா ஃபாத்திமா மற்றும் கவிதா ஆகியோர் மீண்டும் பம்பைக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக மாறியது.

BSNL-ல் பணியாற்றி வந்த, ரெஹனா ஃபாத்திமா ஹிந்து மத உணர்வுகளை காயப்படுத்தியதாகக் கூறி இஸ்லாம் மதத்தில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இந்து மத உணர்வுகளை தாக்கிப் பேசியும், காயப்படுத்தும் விதத்தில் புகைப்படங்கள் பகிர்ந்ததாகவும் ரெஹனா மீது பத்தினம்திட்டா காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ன மேனன் என்பவர் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து ரெஹனா மீது மத உணர்வுகளை காயப்படுத்துதல் ( 153A) பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தான் கைது செய்யப்படக்கூடும் என்று கருதி கேரள உயர்நீதிமன்றத்தில் ரெஹனா முன் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கொச்சியில் இருந்த ரெஹனா இன்று காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். விரைவில் கோர்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


 சபரிமலை விவகாரம் மட்டுமல்லாது இதற்கு முன்னதாக Kiss of Love என்ற இயக்கத்தின் மூலமாக பொது இடங்களில் முத்தம் கொடுக்கும் போராட்டமும், இந்த ஆண்டு மார்ச்சில் நிர்வான போராட்டத்திலும் (தண்ணீர்ப்பழம் கொண்டு மார்பகங்களை மூடுதல்) ஈடுபட்டு சில சர்ச்சைக்களில் சிக்கியுள்ளவர் ரெஹனா ஃபாத்திமா.