புதன், 14 நவம்பர், 2018

கஜா புயல் இன்று மாலை தீவிர புயலாக மாற வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் November 14, 2018

Image

கஜா புயல் இன்று மாலை தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல், பாம்பன் மற்றும் கடலூர் இடையே நாளை மாலை கரையை கடக்கிறது. தற்போது சென்னைக்கு கிழக்கே 540 கிலோமீட்டர் தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 640 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. புயல் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு-தென்மேற்காக நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 5.30 மணி அளவில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது

இதனிடையே, கஜா புயலை எதிர்கொள்ள கடலூரில் தீயணைப்புத்துறை தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்திலுள்ள 15 தீயணைப்பு நிலையங்களில் தலா ஒரு தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏழு படகுகள், 280 லைப் ஜாக்கெட், ஏழு மரம் அறுக்கும் இயந்திரங்கள் போன்ற பல்வேறு உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கடலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். மேலும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.