புதன், 28 நவம்பர், 2018

விடுதலை புலிகள் இயக்கம் சார்பில் வெளியான அறிக்கையால் பரபரப்பு! November 28, 2018

Image

தமிழீழத்தை மீட்டெடுக்க மாவீரர்கள் காட்டிய வழியில் தொடர்ந்து போராடுவோம் என்று விடுதலை புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது.

விடுதலை புலிகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெயருக்காகவும், புகழுக்காகவும் தமது வீரர்கள் போராடவில்லை என்றும் இனம், மொழி, பண்பாடு மீதான அடக்குமுறைக்கு எதிராகவே போராடியதாக தெரிவித்துள்ளது.

கொத்துக்குண்டுகள் வீசி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை, பொய் பிரச்சாரம் செய்து வருவதோடு, சர்வதேச விசாரணையையும் ஏற்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளது.

தமிழீழத்தில் நல்லாட்சி நடப்பதாய் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுவது தமிழர்களுக்கு இழைக்கும் துரோகம் என்றும், இலங்கையில் ஆட்சி மாறும் போது, அதன் தலைவர்கள் இந்திய சார்பிலிருந்து தடம் மாறுவதை இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தமிழீழம் இந்தியாவின் நட்பு நாடாகவே விளங்கும் என, பிரபாகரன் கூறியதை கவனத்தில் கொள்வதுடன், தமிழீழ முக்கியத்துவத்தை உணர்ந்து இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஈழத் தமிழர்கள், எப்போதும் இந்திய இறையாண்மைக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதை கருத்தில் கொண்டு, விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

சிங்கள அரசின் பொய் முகத்தை உலகத்துக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்நாளில் உறுதி ஏற்போம் என கேட்டுக்கொண்டுள்ளது.