புதுக்கோட்டையில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் ஆலங்குடி பகுதி மக்களுக்கு உதவ முன்வருபவர்கள், உதவிகளை தாங்களே நேரில் வந்து வழங்கலாம் என்று அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமீபத்தில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயலால், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டது. உடமைகளை இழந்து பெரும்பாலான மக்கள் தவித்து வரும் நிலையில், அவருகளுக்கு உதவி செய்ய மற்றும் நிவாரணம் வழங்க முன்வந்தால் தன்னை தொடர்பு கொள்ளுமாறு அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து தனது பேஸ்புக் பதிவில் பதிவிட்டுள்ள அவர், கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள 80 ஊராட்சிகளும், 2 பேரூராட்சியும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் வீடுகளையும், தங்கள் உடமைகளையும் இழந்து தவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இப்பகுதி விவசாயிகளை வாழவைத்த மா, பலா, வாழை, தென்னை, தேக்கு போன்ற பல மரங்களையும் அழித்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மனிதநேயமும் நல்ல உள்ளம் படைத்தவர்களும் தங்கள் பகுதி மக்களுக்கு உதவி மற்றும் நிவாரணம் அளிக்க முன்வந்தால் தன்னை தொடர்பு கொள்ளலாமு என்றும், தங்கள் நிறுவனத்தின் பெயரிலோ குடும்பத்தின் பெயரிலோ தங்களுக்கு விருப்பமுள்ள ஊராட்சியை தேர்வு செய்து தாங்களே நேரில் வந்து வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆலங்குடி பகுதிக்கு நிவாரணம் அளிக்க முன்வருபவர்கள் 9842625119 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.