ஞாயிறு, 11 நவம்பர், 2018

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரின் விடுதலையை மத்திய அரசே ரத்து செய்தது அம்பலம்! November 11, 2018

Image

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரின் விடுதலையை மத்திய அரசே ரத்து செய்தது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. 

மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதம் குறித்து 3 மாதங்களில் பதிலளிக்குமாறு கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டதாக கடந்த ஏப்ரல் மாதம் தகவல் வெளியானது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விளக்கம் கேட்டு குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு பேரறிவாளன் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. 

இந்த விவகாரத்தில் தங்களுக்கு தொடர்பில்லை எனக் கூறிய குடியரசுத் தலைவர் அலுவலகம், பேரறிவாளனின் கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியது. அதற்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், 7 பேர் விடுதலைக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த விவகாரத்தில் மத்திய அரசே முடிவு எடுத்துவிட்டதாக கூறியுள்ளது. குடியரசு தலைவருக்கு பரிந்துரை எதுவும் அனுப்பாமல், அவரது பெயரிலேயே மத்திய உள்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. மிகவும் அரிதான நேரங்களில் மட்டுமே குடியரசு தலைவரின் பெயரை பயன்படுத்தி மத்திய உள்துறை அமைச்சகம் இது போன்ற முடிவுகளை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.