வியாழன், 8 நவம்பர், 2018

பாகிஸ்தான் - சீனாவுக்கு இடையில் முதல்முறையாக பஸ் போக்குவரத்து தொடக்கம்! November 7, 2018

Image

இந்தியாவின் பலத்த எதிர்ப்புக்கு இடையில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் வழியாக பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

சுமார் 4.3 லட்சம் கோடி மதிப்பீட்டில் CPEC (China Pakistan Economic Corridor) எனப்படும் சீனா - பாகிஸ்தான் பொருளாதார பாதையின் அங்கமாக பாகிஸ்தானில் பல்வேறு சாலை, ரயில், துறைமுக திட்டங்களும், பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் திட்டமும் சீனாவால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு அங்கமாக பாகிஸ்தானின் லாகூர் நகருக்கும், சீனாவின் Xinjiang மாகாணத்தில் உள்ள காஷ்கர் நகருக்கும் இடையில் சாலை அமைக்கப்பட்டது. இந்தப் பாதை ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி வழியாக செல்வதால் இந்தியா இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி தற்போது இந்த இரண்டு நகரங்களுக்கு இடையில் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு லாகூரில் இருந்து இந்த பேருந்து சேவை தொடங்கப்பட்டது, 36 மணி நேரம் பயணம் செய்து சீனாவில் உள்ள காஷ்கர் நகரை இப்பேருந்து சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான ஒரு வழிப்பாதை பேருந்து கட்டணம் 13,000 ரூபாயாகும். இருவழிப்பாதை கட்டணமாக 23,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 15 சீட்கள் கொண்ட சொகுசுப் பேருந்தான இதன் பெயர் Shuja Express ஆகும். 5 இடங்களில் நின்று செல்லும் இந்தப் பேருந்தின் கட்டணத்தில் உணவுக்கான கட்டணம் சேர்க்கப்பட்டுள்ளது.

Lahore - Kashgar மார்க்கத்தில் சனிக்கிழமை, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் என 4 நாட்களிலும், Kashgar  -Lahore மார்க்கத்தில் செவ்வாய், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களிலும் இப்பேருந்து சேவை கிடைக்கும். பயணிகளுக்கு விசா மற்றும் அடையாள அட்டை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கு இடையிலான சுற்றுலா மற்றும் வர்த்தக பயணிகளுக்கு இந்தப் பேருந்து சேவை பெரும் வரப்பிரசாதமாக அமையும்.