சனி, 10 நவம்பர், 2018

முதியோர் ஓய்வூதியக் குளறுபடி!...கண்ணீர் விடும் பயனாளிகள்... November 10, 2018

Image

நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கும் முதியோர், ஆதரவற்ற இல்லங்கள், ஜெட் வேகத்தில் பறக்கிற காலத்தின் மோசமான முகவரியைச் சொல்லிச் செல்கிறது. ஆதரவற்றோரை அரவணைக்க ஆயிரம் ரூபாய் போதுமானது என்று கருதுகிற அரசாங்கம், முதியோர்களின் முகத்தில் ஆயிரம் ரூபாய் வடிவில் கடவுளைப் பார்ப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறது. நடைமுறை நிஜம் என்பது, அந்த ஆயிரம் ரூபாய் கூட அவர்களுக்கு முழுமையாய்ப் போய்ச் சேர்வதில்லை என்பதைத்தான் கதறக் கதறச் சொல்கிறது.

மூன்றாண்டுக்கு முந்தையக் கணக்குப்படி, இந்த ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் 35.39 லட்சம் பேர் பலன் அடைகின்றனர். தமிழக அரசு ஆண்டொன்றுக்கு இதற்காக  4,201 கோடி ரூபாய் செலவிடுகிறது. நடப்பு 2018-ல் இந்தத் தொகையில் சிலகோடிகள் கூடியிருக்கக் கூடும். 
கடந்த  2011-ல் ஆட்சியமைத்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, அதுவரை அளித்து வந்த 500 ரூபாயை ஆயிரம் ரூபாயாக உயர்த்திக் கொடுத்தது. மத்திய அரசு பங்களிப்பாக மாதம் 500 ரூபாய் மட்டுமே அளிக்கப் படும் நிலையில், செலவைச் சமாளிக்க முடியாமல் நிதித்துறை தத்தளிக்கிறது என்ற குமுறல் 2011-ம் ஆண்டுவாக்கிலேயே கேட்டது. அந்தக் குமுறலின் எதிரொலியாக முன்னரே நடைமுறையில் இருந்த சட்டத்தை, அரசு தீவிரமாக அமல் படுத்தத் தொடங்கியது.  

அதன்படி, “முதியோர் உதவித் தொகை பெறும் நபரின் பெயர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இருந்தால் மட்டும் போதாது. அவருக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சொத்தும், வருமானமும், 20 வயதுக்கு மேற்பட்ட மகனும் இருக்கக் கூடாது” என்பதை உறுதிப் படுத்தியது. 

நடைமுறையில் அரசின் உறுதிப்படுத்தல் என்பது கேலிக்கு ஆளானது. அரசின் விதியை மீறியவர்க்கு அரசின் உதவித் தொகையும்,  விதியை மீறாத தகுதியானவர்களுக்கு  உதவித் தொகைக் கிடைப்பதில் சிக்கலும் நீடித்தது.  இந்தப் பிரச்னையை எப்படி களைவது? என்ன தீர்வு? என்பதில் அரசு அதிகாரிகள் தரப்பில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. தகுதியற்றவர்களை நீக்க,  தகுதியான நபர்களைப்  புதிதாகப் பட்டியலில் சேர்க்க எந்த அதிகாரியின் உத்தரவைப் பின்பற்றுவது என்ற குழப்பமே, உண்மையான பயனாளிகளைக் கதறலில் விட்டிருக்கிறது என்றும் அரசு வட்டாரத் தகவல்கள் இருக்கிறது.

முதியோர், ஆதரவற்ற விதவையர்,  கணவனால் கைவிடப் பட்டவர், ஆதரவற்ற முதிர்கன்னி, மாற்றுத் திறனாளி, திருநங்கையர் என பல்வேறு பயனாளிகளுக்கான ஓய்வூதிய உதவித் தொகையை மத்திய, மாநில அரசுகள் தருகிறது. பயனாளிகள் அந்தப் பணத்தைப் பெறுவதில் இருக்கும் சிக்கல்களைக் களையத்தான் ஒருவரும் இல்லை.

“போஸ்ட் மேன்களே பரவாயில்ல தம்பி, நேரா வீட்டுக்கே வந்து ஆயிரம் ரூபாயைக் கொடுத்துடுவாங்க. பத்தோ, இருபதோ கையில் இருப்பதைக்  கொடுப்போம். வாங்கிட்டுப் போயிடுவாங்க. இப்ப எல்லாம் கம்ப்யூட்டர்ல வந்துடுச்சாம். பேங்க்ல போயி வாங்கிக்கச் சொல்றாங்க, பேங்க்ல மூணு மாசத்துக்கு ஒருமுறைதான் பணத்தைத் தர்றாங்க, அதுவும் ஒரு மாசப் பணம்தான். மிச்சம் இரண்டு மாசம் பணம் எங்கேன்னு  யாருகிட்டேக் கேக்கறதுன்னு தெரியல தம்பி” என்று புலம்பும் மங்களம் அம்மாளுக்கு வயது எழுபத்தி ஐந்து. 

மங்களம் அம்மாள் குறிப்பிட்டுச் சொல்லும், வங்கி, அயனாவரத்தில் உள்ள அரசுடைமை ஆக்கப் பட்டிருக்கும் ஒரு தேசிய வங்கி. முதியோர் ஓய்வூதியக் கணக்கை வைத்திருக்கும் வங்கிகள், ‘ஜீரோ பேலன்ஸ்’ கணக்கில், அவர்களின் வங்கிக் கணக்கை வைத்திருக்க வேண்டும் என்பது சட்ட விதி. ஏனெனில், வங்கிக் கணக்கில் அரசு செலுத்தும் உதவித் தொகையை அப்படியே அவர்கள் எடுத்துக் கொள்ள  இந்த நடைமுறை உதவியாக இருக்க வேண்டும் என்பதே அரசின் தொலை நோக்குத் திட்டம். நடைமுறையில், இந்த முறை பின் பற்றப் படுவது இல்லை. ஜீரோ பேலன்ஸை வைத்துக் கொண்டு, இனிமேல் பணத்தை எடுக்க வராதே என்று நம்மிடம் பேசிய,  அதே மூதாட்டி மங்களம், பலமுறை வங்கி ஊழியர்களால் விரட்டப் பட்டிருக்கிறார்.

ஆதரவற்ற நிலையில் வாழும் முதியோர் துயர் துடைக்க  தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மகத்தான திட்டம்தான்,  ‘தமிழ்நாடு அரசு முதியோர் உதவித் தொகை திட்டம்’ என்று அரசு பெருமையுடன் இத்திட்டம் குறித்துச் சொல்கிறது. போஸ்ட்மேன் கைகளில் ஒப்படைக்கப் பட்டிருந்த பென்சன் திட்டம்,  அங்கிருந்து, வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வங்கிகளின் கைகளுக்கு மாறியிருக்கிறது. தற்போது அங்கிருந்து நகர்ந்து உள்ளூர் வட்டச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் வைத்து பயனாளிகளுக்கு இந்தத் தொகை வழங்கப் படுகிறது. இந்த நகர்வுகள் குறித்து வட்டாட்சியர்கள், வங்கிகள் கவனத்துக்கு வந்திருக்கிறதா என்பதை விளக்கவும் யாரும் இல்லை