
மோடியின் பணக்கார நண்பர்களை பாதுகாப்பதற்காகவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2016ம் ஆம் ஆண்டு இதே நாளில் ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த நடவடிக்கை, இந்திய ஜனநாயகத்திற்கும், இந்திய பொருளாதாரத்திற்கும் கருப்பு தினம் என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், பண மதிப்பிழப்பின்போது ஏ.டி.எம் வாசலில் நின்று உயிர் நீத்த சாமானிய மனிதர்களின் உயிருக்கு எப்போது நீதி கிடைக்கும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் முட்டாள் தனமான நடவடிக்கையால், பல்லாயிரக்கணக்கான சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
மேலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை, அமிதாப்பச்சன் - அமீர்கானின் Thugs of Hindostan படத்தோடு ஒப்பிட்டு கூறியுள்ள அவர், தனது பணக்கார நண்பர்களைப் பாதுகாக்கவே பிரதமர் நரேந்திர மோடி, பண மதிப்பிழப்பைக் கொண்டு வந்ததாகவும், இன்றைய தினம் கருப்பு தினமாக அனுசரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.