credit ns7.tv
சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தக போரால் இந்தியா லாபமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய சீனா - அமெரிக்கா நாடுகளுக்கிடையிலான வர்த்தக போரின் காரணமாக இந்தியாவிற்கு சுமார் 5,354 கோடி ரூபாய் (755 மில்லியன் டாலர்கள்) வருமானம் கிடைத்திருப்பதாக வர்த்தகம் மற்றும் மேம்பாடு தொடர்பான ஐக்கிய நாடுகளின் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் 2019ம் ஆண்டின் முதல் பாதியில் 21 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வர்த்தக மாற்றம் நிகழ்ந்த்திருப்பதாகவும், இதில் சுமார் 14 பில்லியன் அளவிற்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கொரியா, கனடா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் பயனடைந்திருந்தாலும் கூட தைவான், மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெருமளவு லாபம் ஈட்டியிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு கிடைத்த வருமானத்தில் கெமிக்கல்கள் ( 243 மில்லியன் டாலர்), உலோகங்கள் மற்றும் தாது (181 மில்லியன் டாலர்), மின் இயந்திரங்கள் (83 மில்லியன் டாலர்) மற்றும் இதர இயந்திரங்கள் (68 மில்லியன் டாலர்) போன்ற துறைகள் முக்கிய பங்காற்றியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் விவசாயம், உணவு, ஃபர்னிச்சர், அலுவலக இயந்திரங்கள், துல்லியமான கருவிகள், டெக்ஸ்டைல்ஸ், ஆடை, போக்குவரத்து இயந்திரங்கள் போன்ற துறைகளின் ஏற்றுமதி மதிப்பும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.