கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக வளைகுடா நாடான குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றும் வகையிலான சட்டத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பாவை தொடர்ந்து வளைகுடா நாடுகளான துபாய், குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் அதிக அளவில் வேலைக்காக செல்கின்றனர். இதில் குவைத்தில் மட்டும் சுமார் 14 லட்சம் இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் அந்நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையான 48 லட்சம் பேரில் 34 லட்சம் பேர் வெளிநாட்டவர்களாக உள்ளனர்.
இதனிடையே கடந்த சில மாதங்களாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று குவைத்தின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதித்துள்ளது. இதனால் உள்நாட்டு மக்களுக்கு பயனளிக்கும் வகையிலான திட்டங்களை அந்நாட்டு அரசு முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், குவைத்தில் உள்ள மொத்த வெளிநாட்டு மக்கள் தொகையான, 70%ஐ 30% ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் கடந்த மாதம் அறிவித்திருந்தார். இதனை அடுத்து வெளிநாட்டு மக்களை வெளியேற்றும் வகையிலான புதிய சட்டத்திருத்தத்தை அந்நாட்டு அரசு கொண்டுவந்திருந்தது. அதற்கு தற்போது அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சட்டம் மூலம் குவைத்தில் உள்ள ஏராளமான வெளிநாட்டவர்கள் கட்டாயமாக வெளியேற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதில் இந்தியர்கள் மட்டும் 8 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குவைத் அரசின் இந்த முடிவுக்கு அங்கு பணிபுரியும் வெளிநாட்டவர்கள் அனைவரும் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.