னாவில் அரசின் கொரோனா நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த சட்ட பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. பொருளாதாரமும் வரலாறு காணாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. கொரோனா தொடர்பான உண்மைகளை வெளியிட சீனா தவறிவிட்டதாகவும், இந்த பாதிப்புகள் அனைத்துக்கும் சீனாதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அமெரிக்கா தொடக்கம் முதலே குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் அதிகாரத்தை பலப்படுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங் மேற்கொண்டவற்றை குறித்து விமர்சிக்கும் கட்டுரைகளை வெளியிட்ட சட்ட பேராசிரியர் ஜு ஜாங்ருன் என்பவரை சீன அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெய்ஜிங்கின் புறநகர் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 20க்கும் மேற்பட்டவர்களால் அவர் அழைத்துச் செல்லப்பட்டதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலில் சீன அரசின் மோசடி இருப்பதாக அவர் கடந்த பிப்ரவரி மாதம் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். நாட்டின் நிர்வாக கட்டமைப்பை சீனாவின் தலைமை அழித்து வருவதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அந்த பேராசிரியரின் மனைவிக்கு போன் செய்த காவல்துறையினர், தென்மேற்கு நகரமான செங்டூவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட காரணத்திற்காக ஜூயை கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு மிகவும் அபத்தமானது என அவரது நண்பர் தெரிவித்துள்ளார். அவர் கடந்த வாரம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்ததாகவும் நண்பர் குறிப்பிட்டுள்ளார்.
2018ம் ஆண்டு அதிபர் பதவிக் கால வரம்பு ஒழிப்பை எதிர்த்து ஆன்லைனில் ஒரு கட்டுரையில் ஜூ ஜாங்ருன் எழுதியிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்டூவில் அரசின் கருத்துக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட சில கல்வியாளர்களுடன் இவர் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. இதுபோல் அரசுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வந்ததாகவும், அதனால் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
கம்யூனிஸ்ட் கட்டுப்பாட்டில் இருக்கும் சீனாவில் தொடர்ந்து கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டு வருகிறது. அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சீனாவில் அரசுக்கு விரோதமாக செயல்பட்டதாக மனித உரிமை செயற்பாட்டாளர் கின் யாங்மினுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.