சனி, 5 செப்டம்பர், 2020

தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

 கொரோன வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் ரூ. 5000 வரை அபராதம் விதிக்கப்படும் என்ற அவசர சட்ட திருத்தத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.  

 

தமிழகத்தில் மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க, முகக்கவசம் அணிவதுடன், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. தொழிற்சாலைகள், மக்கள் கூடும் இடங்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், போக்குவரத்து உள்ளிட்ட இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.


பொது இடங்களில் விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில், பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். 

 

அதன்படி, தனிமனித இடைவெளியை பின்பற்றாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாயும், பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு 500 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தனிமைப்படுத்துதல் விதிகளை மீறுவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும என கூறப்பட்டுள்ளது. இதே போல், விதியை மீறும் சலூன், ஸ்பா, வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.