மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவி கேட்டு கட்சித் தலைமைக்கு மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்காவிட்டால் வேறு வழிகளை பார்க்க வேண்டியிருக்கும் எனவே இது தொடர்பாக உடனடியாக முடிவு கிடைக்க வேண்டும் என கட்சித் தலைமைக்கு மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கெடு விதித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் அரங்கை அதிரச் செய்துள்ளது.
காங்கிரஸ் தலைவரான சிந்தியா பாஜக தலைவர்களுடன் பேசி வருவதாகவும், மாநில தலைமை பதவி கிடைக்காவிட்டால் கட்சி தாவ தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மற்றொரு முக்கிய தலைவரும் மாநில முதல்வருமான கமல்நாத், இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற போது, முதல்வர் வேட்பாளரின் பெயரில் சிந்தியாவின் பெயரும் முக்கியத்துவம் பெற்றது. எனினும் அனுபவம் வாய்ந்த கமல்நாத்தினை முதல்வராக அறிவித்தது காங்கிரஸ். அப்போது முதலே இந்த பிரச்சனை புகைந்து வந்ததாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு மாநில தலைவர் பதவியை கமல்நாத் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு மாநில தலைவர் பதவி கொடுக்கப்படாவிட்டால் ஆதரவாளர்கள் 500 பேருடன் கட்சியில் இருந்து விலகப் போவதாக Datia பகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி அசோக் டாங்கி கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
credit ns7.tv