சனி, 31 ஆகஸ்ட், 2019

அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) 19 லட்சம் பேரின் பெயர்கள் மிஸ்ஸிங்...!

Credit ns7.tv
Image
அசாமில் இன்று வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் ஆவணத்தில், 19 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. 
அசாமில் வங்கதேச நாட்டினர் அதிகளவில் குடியேறியுள்ள நிலையில், அவர்களைக் கண்டறியும் நோக்கில், தேசிய குடிமக்கள் ஆவணம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ஆவணத்தில், அசாமில் வசிப்பவர்களில் 41 லட்சம் பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை. இதனையடுத்து, இந்திய குடிமகன் என்பதற்கான ஆவணங்களை வைத்துள்ள பலரும், அதுகுறித்து முறையிட்டனர். 
19 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் மிஸ்ஸிங்:
இதன் எதிரொலியாக அவர்களின் பெயர்களை சேர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதோடு, முதலில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் ஆவணம் திருத்தப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்ததை அடுத்து, புதிய தேசிய குடிமக்கள் ஆவணம் இன்று காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த புதிய ஆவணத்தில், 3 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரத்து 4 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேரின் பெயர்கள் ஆவணத்தில் இடம்பெறவில்லை. 
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:
ஆவணத்தில் பெயர் இடம் பெறாதவர்கள், மேல் முறையீடு செய்யலாம் என அசாம் அரசு தெரிவித்துள்ளது. தேசிய குடிமக்கள் ஆவணம் வெளியிடப்பட்டதை முன்னிட்டு, அசாமில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 20 ஆயிரம் துணை ராணுவப்படையினர் அசாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வங்கதேச எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கைக்குப் பிறகு மத்திய அரசு மேற்கொண்டுள்ள மற்றொரு மிகப்பெரிய நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.