சனி, 31 ஆகஸ்ட், 2019

சட்டவிரோத மதமாற்றத்தை தடுக்கும் புதிய மசோதாவை நிறைவேற்றியது ஹிமாச்சல் பிரதேச அரசு..!

Image
சட்டவிரோத முறையில் மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்கும் மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது ஹிமாச்சல் பிரதேச அரசு.
ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத முறையில் மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்கும் வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்திற்கு பதிலாக தற்போது புதிய சட்டத்தை இயற்ற மசோதா ஒன்றை முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையிலான அரசு அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது.
இன்று இதற்காக நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் எதிர்கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது. மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தல், தூண்டுதல், திருமணம் மூலம் மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்துதல் ஆகியவற்றை குற்றமாக கருதி இந்த சட்டத்தின் மூலம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.
முன்னதாக இந்த மசோதா தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்ற, ​​காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆஷா குமாரி, சுக்விந்தர் சுகு, ஜகத் சிங் நேகி மற்றும் எம்எல்ஏ ராகேஷ் சிங்கா ஆகியோர் சில பிரிவுகளில் மாற்றங்களை கோரினர்.
சுக்விந்தர் சுகுவின் பரிந்துரைக்கு பதிலளித்து பேசிய முதல்வர். தாகூர், 13 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வந்த சட்டம் கடுமையானதாக  இல்லை என தெரிவித்தார். மேலும், ஏற்கனவே உள்ள சட்டத்தில் எட்டு பிரிவுகள் மட்டுமே கொண்டிருப்பதால் அதில் மேலும் 10 பிரிவுகளைச் சேர்ப்பது நல்லது அல்ல எனவே திருத்தம் செய்வதற்குப் பதிலாகவே புதிய சட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் முடிவு செய்துள்ளது என கூறினார்.
இதிலும், ஏற்கனவே உள்ள சட்டத்தை போல, ஒருவர் தன்னுடைய மதத்தை மாற்ற விரும்பினால் ஒரு மாதத்திற்கு முன்னதாக மாவட்ட நீதிபதியிடம் மனு வழங்க வேண்டும். மேலும் மதம் மாற்றி வைக்கும் பாதிரியார்களும் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே கடிதம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் தங்களது பெற்றோர்களின் மதத்திற்கே திரும்வோர்களுக்கு இந்த முறையில் இருந்து விளக்களிக்கப்பட்டுள்ளது.
புதிய மசோதாவின் படி, பட்டியலினத்தவர்கள், பெண்கள் அல்லது சிறுவர்களை மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தினால் அவர்களுக்கு சிறைத் தண்டனை இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை இருக்கும். மற்றும் இதில் உள்ள மசோதாவின் 10 வது பிரிவு, இதன் விதிமுறைகளை மீறும் எந்தவொரு நபரும் அல்லது அமைப்பும் நாட்டிற்குள் அல்லது வெளியில் இருந்து எந்தவொரு நன்கொடை அல்லது பங்களிப்பையும் ஏற்க அனுமதிக்கப்படாது என்று கூறுகிறது.
இந்த மசோதாவானது ஆளுநரின் ஒப்புதல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஒரு சட்டமாக மாறவிருக்கிறது.
credit ns7.tv