சனி, 18 ஆகஸ்ட், 2018

​மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சத்து 90 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்! August 18, 2018

Image

மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து 1 லட்சத்து 75 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில், 1 லட்சத்து 90 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், சுமார் 2 லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1 லட்சத்து 75 ஆயிரம் கன அடியாக உள்ளது.

ஏற்கனவே மேட்டூர் அணை 2வது முறையாக  முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணையில் இருந்து 1 லட்சத்து 90 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனை அடுத்து கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இதனிடையே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 5வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 
 
இதேபோன்று, நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 5வது நாளாக  சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்பு கருதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அகஸ்தியர் அருவியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 4வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பாபநாசம் அணையில் இருந்து 9 ஆயிரத்து 149 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை நீர்மட்டம் 68 அடியை நெருங்குவதால்  கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், வைகை அணைக்கு வரும் நீர்வரத்து 4 ஆயிரத்து 608 கன அடியாக உள்ளது. இதனால் அணை நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 71 அடியில் 68 அடியை எட்டிள்ளது. இதனால் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளதாகவும், 69 அடியை எட்டியவுடன் அணைக்கு வரும் உபரிநீர் முழுவதுமாக வெளியேற்றப்படவுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால்,  ஈரோடு - நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் பழைய பாலத்தில் 3வது நாளாக தொடர்ந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், கரையோர மக்கள் மாற்று இடங்களுக்கு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.